வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பாது காப்பு தடுப்புகளை லாரியால் மோதி, அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான, வெள்ளை மாளிகை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மிசோரியில் உள்ள செஸ்டர்பீல்டில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா, 19, என்ற இளைஞர், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் மீது லாரியை ஓட்டி மோதினார்.
இதை பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், கந்துலாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது:
மிசோரியில் இருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்த சாய் வர்ஷித் கந்துலா, லாரியை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அங்கிருந்து நேரடியாக வெள்ளை மாளிகைக்கு வந்த அவர், பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதினார். அவரை கைது செய்த போது, லாரியில் நாஜி கொடி இருந்தது.
சாய் வர்ஷித் கந்துலாவிடம் விசாரித்ததில், அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய வந்ததாகவும், அதிகாரத்தை கைப்பற்ற வந்ததாகவும் தெரிவித்தார்.
இவர் மீது, கொலை வழக்கு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்