சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன..
ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள்.
ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது.. இந்த வழிகளில் ஒன்றை மட்டுமே அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.
தனிக்கட்சியா? இதில் தனிக்கட்சியை இப்போதைக்கு அவரால் துவங்க முடியாது என்கிறார்கள்.. அதேபோல, வேறு கட்சிகளில் இணைவதும் சரிபட்டு வராது என்று ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால்தான், அதிமுகவுக்கே மறுபடியும் செல்ல முயற்சிகளை சில நாட்களுக்கு முன்பு எடுத்தாராம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளாத நிலையில், மேலும் அப்செட் ஆனதாக தெரிகிறது..
அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்து கொள்வது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகிறதாம்.. அதாவது, அதிமுகவின் மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மறுபடியும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்கிறார்களாம்.. காரணம், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பல்வேறு சட்ட நெருக்கடிகளை கொடுத்து வந்தவர் ஓபிஎஸ்..
ஆதரவு வட்டம்: ஒருவழியாக இப்போதுதான், மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, கட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபடுத்தி இருக்கிறோம்.. மறுபடியும் அவர் கட்சிக்குள் வந்தால் தன்னுடைய தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது… அதுவுமில்லாமல், அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர மறுபடியும் முயற்சிகளை மேற்கொள்வார்.. இதெல்லாம் மறுபடியும் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்..
சசிகலா, தினகரன் மீது இப்போதுவரை ஆதரவுக்கரத்தை வெளிப்படையாகவே நீட்டி வருகிறார்.. மறுபடியும் அவர்களை கட்சிக்குள் அரவணைக்கவே முயற்சிப்பார்.. அதேபோல, முக்கியமான முடிவுகளை, கட்சியின் தலைமை எடுக்க நேர்ந்தால், அதற்கு ஓபிஎஸ் ஆதரவு தருவாரா? என்று தெரியவில்லை.. அதனால், ஓபிஎஸ் அதிமுகவுக்குள் வராமல் இருப்பதே சரியாக இருக்கும்” என்ற காரணங்களை சீனியர்கள் அடுக்குகிறார்கள்.
அதிகார வரம்பு: ஆனால், மற்றொரு தரப்போ அதாவது தொண்டர்கள் தரப்பிலோ இதற்கு மாறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன.. குறிப்பாக, “ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தேவை.. பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓபிஎஸ் கட்சிக்குள் இருந்தால் மட்டுமே இந்த நிலைமையை சமாளிக்க முடியும்.. அதிகார வரம்பை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.. தன்னுடைய கொங்கு மண்டலத்துக்கு மட்டுமே பெருவாரியான நலனை எடப்பாடி பழனிசாமி பெற்று தந்த நிலையில், இப்போது பொதுச்செயலாளராகி விட்டதால், இன்னும் அதிகமான “பலன்கள்”, கொங்குவுக்கே செல்லக்கூடும்.
முக்குலத்தோர்: அவ்வளவுஏன், அமித்ஷாவை கடந்த வாரம் சந்திக்க சென்றபோதுகூட, தன்னுடன் கொங்கு மண்டல தலைவர்களை மட்டுமே உடன் அழைத்து சென்றுள்ளார்.. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்து கொண்டிருககிறது.. வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே அதில் இல்லை..
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். சீனியர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றிருக்கிறார். இதில், முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்கும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதேபோல, உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை. கட்சியின் முழுமையான தலைவராகிவிட்ட பிறகும்கூட, இப்படியான புறக்கணிப்புகள் சலசலப்பை கூட்டி வருகிறது.
புறக்கணிப்புகள்: இனி இந்த புறக்கணிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.. எனவே, ஓபிஎஸ்ஸுக்கு ஏதாவது ஒரு பதவியை தர வேண்டும்.. பாஜகவுடன் கூட்டணியை அதிமுக விரும்புகிறது என்றால், பாஜக விரும்பும் பன்னீர்செல்வத்தையும் கட்சிக்குள் இணைப்பதில் தவறில்லை.. வேண்டுமானால் நிபந்தனைகளின் பேரில் ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைத்து கொள்ளலாம்..
அதனால் தான் “பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது” என்று அண்ணாமலையும் சூசகமாக சொல்லி உள்ளார்.. திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தும், அதிமுக பிரச்சனையால், அதை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளோம்.. அதனால் ஓபிஎஸ் இங்கு தேவை” என்று ஒருசாரார் சொல்லி வருகிறார்களாம்.
என்னதான் வழி: ஆக, ஓபிஎஸ்ஸூக்கு இருவேறு கருத்துக்கள் நிலவிவரும்நிலையில், அவர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை..
எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ்ஸையும், ரவீந்திரநாத்தையும், பாஜக மேலிடம் நழுவவிடாத சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலும், சங்கடமும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதிமுகவுக்கான பாஜகவின் அழுத்தமும் இனி மறைமுகமாக இருக்கக்கூடும் என்றும் கணித்து சொல்கிறார்கள்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதுபோல, அதிமுகவுக்குள்ளேயே இவர்கள் ஒன்றுகூடி பேசி தீர்த்து கொள்வதுதான் ஒரே வழியோ??… என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!