கோடை விடுமுறையை இனிதாகக் கழிக்கப் பலரும் பயணம் செய்யும் நாள்கள் இது. நாம் தேர்வு செய்கிற இடங்கள் பெரும்பாலும் கடல், மலை, அருவி என்றே இருக்கும். இந்த மாதிரியான இடங்களில் இயற்கைச் சூழலும் உற்சாகமும் நிரம்பி வழிந்தாலும், பாதுகாப்பு சார்ந்து இவ்விடங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது பற்றி விவரிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த தனியார் பயண ஒருங்கிணைப்பாளர் கண்ணன்.
அருவி
* ஏதாவது குறிப்பிட்ட விஷயத்தின் மீது அதீத அச்சம் (ஃபோபியா) உள்ளவர்கள், மன நோய் உள்ளவர்கள் அருவிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.
* அருவிகளில் உள்ள மகரந்தங்கள் மற்றும் பாசிகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருப்பவர்கள் அருவிகளில் நனைவதைத் தவிர்க்க வேண்டும்.
* வலிப்பு நோய் உள்ளவர்கள் ஜில்லென்ற நீரில் குளித்தால் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு அதிகமாக, வேகமாக விழும் நீரின் அளவினால் பேலன்ஸ் தவறலாம், பாறை வழுக்கலாம், கீழே விழ நேரிடலாம்.
* அருவியில் குளிப்பவர்கள் டைவ் அடிப்பது, ரொம்ப வேகமாக விழும் நீரில் நிற்பது, அருவியின் முனையில் நின்று செல்ஃபி எடுப்பதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
கடல்
சரும ஒவ்வாமை மற்றும் சரும நோய் உள்ளவர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்கலாம்.
நீச்சல் தெரியாதவர்கள், அதிகமாக அலைகளில் அனுபவம் இல்லாதவர்கள் கடற்கரையில் இருந்து அதிக தூரம் உள்ளே செல்லக் கூடாது. யாராக இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட கரைகளில் மட்டுமே இறங்க வேண்டும். அனுமதியில்லாத பகுதிகள் என்றால் அவை ஆபத்தானவை என்று பொருள்; அங்கு இறங்கவே கூடாது.
கூட்டமாகச் சொல்லும் பலருக்கும், தண்ணீரை பார்த்தவுடன் ஒரு குருட்டு தைரியமும் அதீத குஷியும் வந்துவிடுகிறது. ஆனால், தண்ணீர் எப்போதுமே ஆபத்தானது. எனவே, எந்த நீர்நிலை என்றாலும் அதில் இறங்குவதற்கு முன் அது பாதுகாப்பானதா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இறங்கிய பின்னரும், களிப்பிலும் சாகச நோக்கிலும் தண்ணீரின் ஆழத்துக்குச் செல்லக் கூடாது.
மலை
மலைப் பிரதேசத்தில் மேலே செல்லச்செல்ல, ஆக்சிஜன் அளவு குறையும். எனவே பின்வரும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவும்…
* ஏதேனும் கடுமையான நோய்க்கூறுகள் உள்ளவர்கள், மக்கள் தொடர்பில் பிரச்னை உள்ள மனநோய் உள்ளவர்கள் மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
* இதய நோய் உள்ளவர்கள், கடந்த 6 மாதங்களுக்கள் மாரடைப்பு ஏற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் (அழுத்தம் 180/110 மிமீ Hg ஐ விட அதிகமாக இருப்பவர்கள்) மலைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கலாம்.
* சுவாச அமைப்பு நோய்களான ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சுவாசக் குழாயில் ரத்தப்போக்கு ஏற்படும் ‘ஹீமோப்டிசிஸ்’, காசநோய், சப்அக்யூட் ஹெபடைடிஸ் உள்ளவர்கள், முதுகுவலி உள்ளவர்கள் மலைகளை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவும்.
* வாந்தி பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் முன்னரே அதற்கான மருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தீம் பார்க்
* குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பும் தீம் பார்க்குகளில் முழுவதும் நீர் விளையாட்டுகள் இருப்பதால், அதிக நேரம் நீரில் செலவிடுவது போன்று இருக்கும். எனவே, காய்ச்சல், சளி போன்ற நாள்களில் இங்கு செல்லக் கூடாது. கூடவே இங்கு சாகச விளையாட்டுகள் அதிகமாக இருக்கும். இவற்றை இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
* தற்போதைய கோடை விடுமுறை காலத்தில் தீம் பார்க்குகளில் அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால், வார இறுதி நாள்களில் குழந்தைகளுடன் செல்வதை தவிர்க்கவும்.
* கை, கால்களில் டயபடிக் உள்ளிட்ட புண்கள் உள்ளவர்கள், மற்றவர்களின் நலன் கருதி புண் ஆறும் காலம் வரை தீம் பார்க் செல்வதை தவிர்க்கலாம்.
ட்ரெக்கிங்
* கோடைக்காலத்தை பொறுத்தவரை ட்ரெக்கிங்கை தவிர்ப்பது நல்லது.
* தவிர்க்க முடியாத ட்ரெக்கிங் என்றால் முன்கூட்டியே செல்லும் இடம், அங்கிருக்கும் சூழல், வெப்பநிலை அனைத்தையும் செக் செய்து பின்பு புக் செய்யவும்
* காய்ந்து கிடக்கும் காடுகளில், மலைப் பிரதேசங்களில் ட்ரெக்கிங் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். திடீரென காட்டு தீ ஏற்படும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கை.