புதுடெல்லி: ஒரு ஆணின் ஈகோ மற்றும் சுயவிளம்பரத்திற்கான விருப்பம் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு உரிமையைத் தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விவகாரத்தில் அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த திறப்பு விழாவினை புறக்கணிக்கப்போவதாக 20 எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”நேற்று ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் உயர் நீதிமன்ற வளாகத்தில் நாட்டின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார். ஒரு ஆணின் ஈகோ மற்றும் சுய விளம்பரத்திற்கான மோகம், நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவருக்கு, வரும் 28-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதற்கான அரசியலமைப்பு உரிமையை மறுக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த ட்வீட்டில்,’அசோகர் தி கிரேட்’, ‘அக்பர் தி கிரேட்’ வரிசையில் மோடி தி இனா’கிரேட்’ (Inaugurate) என்று வார்த்தைஜாலம் மூலம் பகடி செய்துள்ளார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடும் எதிப்புத் தெரிவித்துள்ளது. அக்கூட்டணி,”எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நமது ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலைமைப்பு மதிப்புகளுக்கான அப்பட்டமான அவமதிப்பு” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். சர்வாதிகாரப் போக்கு: நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை” என்று தெரிவித்திருந்தது.