டாஸ்மாக் மதுபான வகைகளை, டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யவும், தமிழகத்தில் மதுவின் தரம் உறுதி செய்யப்படும் வரை மது விற்பனை செய்ய தடை கோரியும் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோவை பூமிராஜ் என்பவர், டாஸ்மார்க் மதுபானங்களை அருகில் உள்ள டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்ய நிரந்தரமாக தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வரை, தமிழகம் முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
மது வகைகள் தரமாக உள்ளதா? எத்தனை சதவீதம் அந்த மதுவில் ஆல்கஹால் உள்ளது? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பூமிராஜ் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் மதுபான பார் நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுபானம் விற்க தடை விதிக்க எப்படி வழக்கு தொடர முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுபான தரத்தை உறுதி செய்யும் வரை டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனைக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, மனுதாரர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும்போது, அங்கேயே இந்த வழக்கை தொடரலாமே என்று கூறி, வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.