சென்னை: திமுக அமைச்சர் உதயநிதியும் – அமித்ஷா மகன் ஜெய்ஷாவும் சந்தித்து பேசியதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அதுகுறித்து சில சுவாரஸ்ய செய்திகளும் கசிந்து கொண்டிருக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு, டிக்கெட்டுகளை எம்எல்ஏக்களுக்கு தர வேண்டும் என்று அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணி கோரிக்கை வைத்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி அப்போது பதில் தந்திருந்தார்..
நெருங்கிய நண்பர்: அதில், “4 ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டிகள், சென்னையில் நடக்கவில்லை.. இப்போதுதான் நடக்கிறது… நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தீர்கள்.. ஐபிஎல் யார் நடத்துகிறார்கள் என்றால் பிசிசிஐ. உங்களின் நெருங்கிய நண்பர் அமித் ஷா இருக்கிறார் அல்லவா? அவர் மகன் ஜெய்ஷா தான் தலைமை பொறுப்பு வகிக்கிறார். நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். நீங்கள் சொன்னால் கேட்பார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஐந்து டிக்கெட் வாங்கி கொடுத்தால் போதும். நாங்கள் காசு கொடுத்து கூட வாங்கி கொள்கிறோம். இல்லையெனில் வேறு ஏதாவது கணக்கில் சேர்த்து விடுவீர்கள்” என்றார். உதயநிதி இப்படி பேசியதுமே பேரவையில் சிரிப்பொலியை எதிரொலிக்க செய்தனர்..
ஆனால், தமிழக சட்டமன்றத்தில் அமித் ஷா பெயரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியற்கு பாஜக கொந்தளித்திருந்தது.. இப்போது விஷயம் என்னவென்றால், அமித்ஷா மகனை, உதயநிதி சந்தித்தாராம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலருமான ஜெய்ஷாவுடன், உதயநிதி தனியாக பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியை போலவே, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும், விளையாட்டு துறையில் ஆர்வமிக்கவர். குஜராத் கிரிக்கெட் சங்க பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.. இப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக திகழ்கிறார்..
நேருக்கு நேர்: சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில், நேற்று முன்தினம் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின… இந்த போட்டியை பார்க்க, ஜெய்ஷாவும், உதயநிதியும் வந்திருக்கிறார்கள்.. அப்போது 2 பேருமே ஒன்றாக உட்கார்ந்து போட்டியை ரசித்து பார்த்தார்களாம்.. ஜெய்ஷாவும், உதயநிதியும் ஒருவருக்கொருர் ஸ்டேடியத்தில் பார்த்ததுமே கைகுலுக்கி கொண்டுள்ளனர்..
அப்போது ஜெய்ஷா உதயநிதியிடம், “சட்டமன்றத்தில் ஐபிஎல் டிக்கெட் பற்றி உங்களிடம் கேட்டதற்கு, என் பெயரை சொல்லி, என்கிட்ட கேட்க சொன்னீங்களாமே? என்று கேட்டுள்ளார்.. நேருக்கு நேர் ஜெய்ஷா, இப்படி கேள்வியை கேட்டுவிடுவார் என்று உதயநிதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எனினும், அந்த கேள்வியை எதிர்பார்க்காமல் பலமாக சிரித்து விட்டாராம் உதயநிதி.. சட்டசபையில் பேசியது, டெல்லி மேலிடம் வரை சென்றுள்ளதையும் கவனித்தாராம்..
இதற்கு பிறகு, இருவரும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.. இதைதவிர 2 பேரும் தனியாக சந்தித்து பேசியதாகவும் சொல்கிறார்கள்.. ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை..
உள்நோக்கம்: இந்த தகவல் நேற்றுமுதல் சோஷியல் மீடியாவில் வட்டமடித்துவரும் நிலையில், திமுக தரப்பிலேயே இதற்கு உரிய விளக்கம் தந்து முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.. “2 பேருமே விளையாட்டு ஆர்வம் மிக்கவர்கள்.. 2 பேருமே அதற்குரிய பொறுப்பிலும் இருப்பவர்கள்.. இந்த அடிப்படையில் அவர்கள் சந்தித்து பேசியிருக்கலாம்.. இதையெல்லாம் அரசியல் சந்திப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று திமுகவினர் தெரிவித்து வருகிறார்கள்.