கோடைக்காலத்தில் சூரியன் நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், சூரிய ஒளிக்கதிர்கள் நம் கண்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சூரிய ஒளியானது கண்களை பாதிக்குமா… என்னென்ன பிரச்னைகளை உண்டாக்கும்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.
சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களான UV-A மற்றும் UV-B இரண்டும், சருமத்தில் ஊடுருவி புற்றுநோயை ஏற்படுத்துவது போல, கண்களில் விழித்திரையை (retina) பாதித்து (Macula degeneration)மாகுலர் டீஜெனெரேஷன் எனப்படும் பார்வை இழப்பு, மற்றும் கண் இமைகளில் புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
வெயில் நேரத்தில் அதிகமாக சூரிய ஒளியில் நின்று வேலை செய்பவர்களுக்கு, கண் கருவிழியை புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் கார்னியல் பகுதி சேதமாகி, கண்ணில் உள்ள வெள்ளைப் பகுதியில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும். இப்பிரச்னைக்கு நீண்ட நாள்கள் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், கண்களில் சதை வளர்ந்து, அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது .
அதீத வெப்பத்தால் கண்களின் லென்ஸ் பாதிக்கபட்டு புரை உண்டாகலாம். இதனால் பார்வைத்திறன் குறையும். வெயிலில் கண்கள் நேரடியாகப் படுவதால், கண் வறட்சி ஏற்படும் மற்றும் கண்களில் அழுத்தம் உண்டாகி அடிக்கடி கண்களைத் தேய்ப்பதன் மூலம், கண் எரிச்சல், கண் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல், கண் சிவந்து போவது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாகும். இது போன்ற பிரச்னைகளுக்கு கண் மருத்துவர்களின் ஆலோசனையோடு சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
அதோடு நம் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், UV கதிர்வீச்சினால் கண்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பார்வை மங்கலாகத் தெரிவது, கண்களில் நீர்வடிதல், கண் சிவந்து போவது, வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை வெளியில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். யுவி பாதுகாப்புகொண்ட சன் கிளாஸ்களை பயன்படுத்தினால், கதிர்வீச்சில் இருந்து கண்களைப் பாதுகாக்கலாம். முகம் மற்றும் கண்களை மறைப்பதற்கு, தொப்பி அணிந்து வெளிய செல்வது நல்லது.
இதுதவிர நிறைய தண்ணீர் குடிப்பது, ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது அவசியம். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி போன்றவற்றை வெட்டி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டால், குளிர்ச்சியாக இருக்கும். சூரியனை மேகம் மூடி இருந்தாலும், இந்த யுவி-ஏ மற்றும் யுவி-பி கதிர்வீசசின் பாதிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதனால் வெயிலில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
– அ. பிரியதர்ஷினி