காஞ்சிபுரம்: திமுக ஆட்சியில் மீண்டும் கரண்ட் அடிக்கடி கட் ஆகிவிடுவது விமர்சனத்தை கிளப்பி வருகிறது.. இந்நிலையில், திமுக அரசின் விழாவில் பரபரப்பு சம்பவம் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலம் ஆரம்பமாகிவிட்டதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது.. இதனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அதிலும், சென்னை, புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. கோடை வெயில் வாட்டுவதால் குடியிருப்பு, அலுவலகம், தொழிற்சாலைகளில், அதிகளவில் மின் தேவை ஏற்பட்டுள்ளது
என்ன காரணம்: பல இடங்களில் மின்மாற்றியின் திறனை மேம்படுத்தாமல் இருப்பதாலும், மின்வெட்டு பிரச்னை அதிகரித்து வருகிறது. முந்தைய காலம்போல், மீண்டும் மின்வெட்டு ஆரம்பமாகி உள்ளது, திமுக அரசு மீதான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறது.. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி வருகின்றன.
அடிக்கடி மின்வெட்டு: “மின் வெட்டினால் திமுக ஆட்சியே பறிபோனது என்பதையெல்லாம் முதலமைச்சர் நன்கு அறிவார்.. அதனால், முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற வேண்டும்” என்று ஓபிஎஸ்ஸும் வலியுறுத்தி வருகிறார்.. ஆனால், மின்வாரிய ஊழியர்கள் தரப்பில், இந்த மின்வெட்டுக்கு சில காரணம் சொல்லப்படுகிறது.
“இரவு 10:00 மணிக்கு மேல், ஒரே நேரத்தில் ஏசி, ஃபேன் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்துவதால், மின்மாற்றியில் சுமை தாங்காமல் பழுது ஏற்படுகிறது என்கிறார்கள்..
இதனால், இரவு நேரத்தில் 100 கே.வி., திறன் உடைய மின்மாற்றியில், ஒரே நேரத்தில் 370 கே.வி.,க்கு மேல் மின்சாரம் பயன்பாடு அதிகரிக்கும்போது, மின்மாற்றி வெடிக்கிறது.. இதனால், பழுதான மின்மாற்றியை மாற்றவும், சில இடங்களில் மின் மாற்றியின் திறனை அதிகரிக்கவும் பணிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், திருவள்ளூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது..
எம்எல்ஏ பங்கேற்பு: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.. பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடந்தது.. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
பிறகு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.. திமுகவின் மூத்த நிர்வாகிகளும், தலைவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர்.. அப்போது திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டது.. அந்த பகுதி முழுவதுமே மின்தடை ஏற்பட்டது.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், மேடைக்கு அருகே நின்று கொண்டு, நிர்வாகிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்தார் எம்எல்ஏ .
நீண்ட நேரமாக காத்திருந்தும் கரண்ட் வரவில்லை.. இந்த விழாவை முடித்துவிட்டு, இன்னொரு கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்ததையும் எம்எல்ஏ சொல்லி கொண்டே இருந்தார்..
கிளம்பி சென்றார்: பிறகு, பயனாளி ஒருவருக்கு மட்டும் நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.. அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.,. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு, மறுபடியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, இன்னொரு கூட்டத்திற்கு கிளம்பி சென்றார்.. கரண்ட் பிரச்சனையால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிகழ்ச்சியில் இப்படி கரண்ட் போவது முதல்முறை கிடையாது.. ஏற்கனவே மூத்த தலைவர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இப்படித்தான் பாதியிலேயே கரண்ட் போய்விட்டது.. திடீரென கரண்ட் போய்விட்டதால், 3 மின் வாரிய அதிகாரிகளும் அப்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
டிரான்ஸ்பர்: அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போதும் கரண்ட் போய்விட்டது.. இதனால் துரைமுருகன் டென்ஷன் ஆனார்.. மின் வாரிய அதிகாரிகளுக்கே போன் போட்டு, ஓபன் மைக்கில் திட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிக்காரர்களும் செல்போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து கூச்சலிட தொடங்கினர்.. இதெல்லாம் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதே மின்வெட்டு மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த கவலையையும், இன்னலையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!