சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) ரஜினிக்கு வெங்கட் பிரபு எழுதிய கதையில்தான் விஜய் இப்போது நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அனிருத் இசையமைப்பில் லலித் தயாரித்துவருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
விஜய்யின் அடுத்த படம்: லியோ படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. விஜய்யை அடுத்தது தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என்றும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் ஓகேதான் தெலுங்கு இயக்குநருடன் மீண்டும் தளபதி விஜய் இணைவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என ரசிகர்கள் கூறினர்.
வெங்கட் பிரபுவை டிக் செய்த விஜய்: இந்தச் சூழலில் கடந்த சில நாள்களாக கோலிவுட்டில் ஒரு ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் கதையை கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லிவிட்டதாகவும் அந்தக் கதையை இப்போது விஜய் டிக் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சம்பளம் எவ்வளவு: இதனையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட சூழலில் விஜய் அந்தப் படத்துக்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்திதான், லியோவுக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதே சம்பளத்தைத்தான் இந்தப் படத்துக்கும் அவர் பெறுவார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இந்தப் படத்துக்காக விஜய் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் பெறுவது உறுதிதான் எனவும் புதிய தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.
ரஜினிக்கு எழுதிய கதையா?: இந்நிலையில் மாநாடு படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா மூலம் ரஜினிக்கு வெங்கட் பிரபு இரண்டு கதைகள் கூறியதாகவும் ஆனால் அந்தக் கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சூழலில் ரஜினிக்கு எழுதிய இரண்டு கதைகளில் ஒரு கதையைத்தான் விஜய் ஓகே செய்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.
எப்போது ஷூட்டிங்?: லியோ படத்தின் ஷூட்டிங் ஜூன் 15ஆம் தேதி முடிவடையவிருக்கிறது. இதனையடுத்து ஜூன் 22ஆம் தேதி விஜய் 68 படத்தின் பூஜை போடப்படவிருக்கிறதாம். அதனையடுத்து விஜய்க்கான போர்ஷன் ஜூலை மாதமோ இல்லை ஜூன் மாதமோ தொடங்கலாம் என கூறப்படுகிறது.