கார்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ராஜூமுருகன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் `ஜப்பான்’ படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இன்னமும் படப்பிடிப்பில்தான் இருக்கிறது `ஜப்பான்’. இந்நிலையில் கார்த்தியின் அடுத்தடுத்த லைன் அப்கள் குறித்து விசாரித்தேன்.
ராஜூமுருகனின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படப்பிடிப்பு இதுவரை 80 சதவிகிதம் நிறைவடைந்திருக்கிறது. கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். தவிர, தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், ‘வாகை’ சந்திரசேகர், பவா செல்லத்துரை எனப் பலரும் நடிக்கிறார்கள். ‘பொன்னியின் செல்வன்’ ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, கேரளா ஆகிய இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அதனுடன் ஒரு பாடல் காட்சியும் படமாக்க வேண்டியிருக்கிறது. கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, படம் தீபாவளி ரிலீஸ் என்பதையும் அறிவித்துவிட்டனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ‘பொன்னியின் செல்வன்’ பேட்ச் வேலைகளுக்காக சில நாள்கள் சென்றார். அதனால் அந்தத் தேதிகளில் கார்த்தியும் தனது கால்ஷீட்டை வீணாக்காமல் அடுத்து நடிக்கவிருக்கும் நலன் குமாரசாமியின் படத்திற்குப் போனார். அதன் பிறகு ‘ஜப்பான்’ படத்துக்கு மீண்டும் வந்தார் கார்த்தி.
நலனின் படத்திற்கு இன்னமும் டைட்டில் வைக்கவில்லை. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் சென்னையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ‘ஜப்பான்’ ரிலீஸ் நெருங்கும் வேலைகளில் இதன் அப்டேட்டை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
நலனின் படத்தை முடித்த பிறகே, ’96’ இயக்குநர் பிரேம்குமாரின் படத்திற்கு வருகிறார். இதை சூர்யா தயாரிக்கிறார். இது ஜல்லிக்கட்டு தொடர்பான கதை என்ற பேச்சும் எழுந்தது. ஆனால், அதுகுறித்த படமல்ல என்கிறார்கள். ஆனால், ‘ஜல்லிக்கட்டு’ம் படத்தில் ஒரு சீக்குவென்ஸாக இருக்கிறது. ’96’ போன்ற காதல் கதை இல்லை என்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ போல ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் என்றும் தெரிவிக்கின்றனர். இதனை முடித்துவிட்டே லோகேஷ் கனகராஜின் ‘கைதி 2’க்குள் வருகிறார் கார்த்தி. லோகேஷ் இப்போது ‘லியோ’வை இயக்கி வருகிறார். ‘லியோ’வை முடித்து விட்டு அவர் ரஜினி படத்தை இயக்குகிறார். இதற்கடுத்து அவர் கார்த்தியை இயக்குவார் என்கிறார்கள்.