புதிதாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான ராஜா என்ற `பழக்கடை’ ராஜாவின் மனைவி சுந்தரி ராஜா மேயராக பதவி வகிக்கிறார். தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக லஞ்சம், ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கிவரும் இந்த மாநகராட்சி, தற்போது தன்னுடைய ஊழியர்களை கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக தி.மு.க உறுப்பினர் சேர்க்கைக்காக மாநகராட்சி ஊழியர்களை வீடு வீடாக அனுப்பி வாக்காளர் அடையாள அட்டையின் நகலை வாங்குவதாக புகார் எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோவில் பேசும் ஆண் ஒருவர், `நான் காமராஜர் நகரில் இருந்து பேசுகிறேன். வீட்டில் வந்து ஆதார் அட்டை கேட்டிருக்கிறீர்களே எதற்காக?’ என்று கேட்கிறார். அதற்கு மறுமுனையில் இருக்கும் பெண், `ஆதார் அட்டையை நான் கேட்கவில்லையே. வாக்காளர் அட்டையைத்தானே கேட்டேன்’ என்கிறார். அந்த ஆண், `எதற்காக கேட்டீர்கள்?’ என்று கேட்க, ,`தி.மு.கவில் உறுப்பினராக சேர்பதற்காக கேட்டோம். நாங்கள் கடலூர் மாநகராட்சியில் வேலை செய்கிறோம்’ என்கிறார் அந்த பெண். அதற்கு, `மாநகராட்சியில் வேலை செய்வதாக கூறுகிறீர்கள் ஆனால் தி.மு.கவுக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறுகிறீர்களே..?’ என்று அந்த ஆண் கேட்க, `மாநகராட்சியில் இந்த வேலையைத்தான் எங்களை செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
மாநகராட்சியில் என்ன வேலை செய்ய சொல்கிறார்களோ அந்த வேலையை செய்வதுதான் எங்கள் வேலை. உங்களுக்கு தி.மு.கவில் சேர்வதற்கு விருப்பம் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை கொடுக்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். நாங்கள் உங்களை கட்டாயப் படுத்தியிருந்தால் நீங்கள் போன் செய்து கேட்கலாம்” என்கிறார் அந்த பெண். அதற்கு அந்த ஆண், `சரி மேடம் எப்படி என்னை உறுப்பினராக சேர்ப்பீர்கள் ?’ என்று கேட்க, `நீங்கள் கொடுக்கும் வாக்காளர் அட்டையின் நகலை மாநகராட்சியில் கொடுத்துவிடுவோம். மற்ற அனைத்தையும் அவர்கள்தான் செய்வார்கள். நீங்கள் வேறு எதாவது கேட்க வேண்டும் என்றால் மாநகராட்சியில் மேயரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்கிறார் கூலாக.
மற்றொரு ஆடியோவில், `எனது வாக்காளர் அடையாள அட்டை மிஸ் ஆகிவிட்டது. நீங்கள் வாங்கித் தருவீர்களா என்பதற்காக கேட்டேன்’ என்கிறார் ஒருவர். அதற்கு மறுமுனையில் பேசும் இதே பெண், `காமராஜர் நகரில் அனைவரிடமும் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை வாங்கிவிட்டேன். உங்கள் வீட்டில் மட்டும்தான் வாங்கவில்லை’ என்கிறார். அதற்கு, `வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி என்ன செய்வீர்கள்?’ என்று ஆண் கேட்க, `தி.மு.கவில் உறுப்பினர்களாக சேர்ப்பார்களாம்’ என்பதாக நீள்கிறது அந்த ஆடியோ.
மாநகராட்சி ஊழியர் என்று சொல்லி பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையின் நகலைப் பெற்ற அந்த பெண்ணை அவரின் செல்போனில் தொடர்புகொண்டோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, `நீங்கள் மாநகராட்சியில் வேலை செய்கிறீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு `ஆமாம்’ என்று பதிலளித்தவரிடம், தி.மு.க உறுப்பினர் சேர்க்கைக்காக வாக்காளர் அடையாள அட்டையின் நகலை வீடு வீடாகச் சென்று வாங்கியது குறித்தும், அவரின் பெயர், பதவி குறித்து கேட்டோம். அதை கூற மறுத்துவிட்ட அவர், `நீங்கள் எதாவது கேட்க வேண்டும் என்றால் மாநகராட்சியில் கேட்டுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து விளக்கம் கேட்க கடலூர் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டோம். “மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்படி எந்த வேலையையும் நாங்கள் கொடுக்கவில்லை. மேலும் அந்த பெண்ணின் பெயர் என்ன, அவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று கூறவில்லை” என்றவரிடம், அப்படி என்றால் மாநகராட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது காவல் நிலையத்தில் புகார் எதேனும் கொடுப்பீர்களா என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `பேசியவர் யார் என்று தெரிந்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்றார் சாதாரணமாக.
மேயர் சுந்தரி ராஜாவை தொடர்புகொண்டோம். “மாநகராட்சியில் ஊழியர் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் டெங்கு காய்ச்சல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளுக்காக வீடு வீடால செல்வதற்காக தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்துவோம். ஆனால் தற்போது அவர்களுக்கு எந்த பணியும் இல்லாததால் 15 நாள்களுக்கு முன்பே அவர்களை நிறுத்திவிட்டோம். அவர்களை வாக்காளர் பணிக்காக கட்சிக்காரர்கள் கூப்பிட்டிருக்கலாம். மாநகராட்சி ஊழியர் என்று அவர்கள் கூறிக்கொண்டால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? ” என்று முடித்துக்கொண்டார்.