தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை 15 நாட்களுக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: கழிவு நீர் அகற்றும் வாகனங்களை 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக போக்குவரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் தமிழகம் முழுவதும், பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

கழிவுநீர் அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம், 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தக் கூடாது என சட்டம் உள்ளது. இதனை மீறுவோர் மீது பிரிவு 9-ன்படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது.

கழிவுநீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவுப் புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் (Sewage Tanker) என பதியப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் “கழிவு நீர் அகற்றும் வாகனம்” என உரிய தகுதிச்சான்றுடன் (Fitness Certificate) 15 தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ள பிரிவு 86 மோட்டா வாகன சட்டம், 1988-ன்படி இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்து கொள்ள தவறினால், அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.