அப்பவே அப்படி… காதலியை அடைய 4 மாதங்கள் சைக்கிளில் பயணம் செய்த ஓவியர்

ஸ்டாக்ஹோம்,

அது 1970-ம் ஆண்டு காலகட்டம். டெல்லியில் ஓவிய கல்லூரியில் பிரத்யும்னா குமார் மகாநந்தியா என்பவர் மாணவராக படித்து வந்துள்ளார்.

இவரது ஓவியம் பற்றி அப்போது, பல்வேறு பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி உள்ளன. இவரை பற்றி அறிந்த சுவீடனை சேர்ந்த சார்லட் வோன் ஸ்கெட்வின் என்ற இளம்பெண் (அப்போது வயது 19), ஐரோப்பியா வழியே துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கடந்து, 22 நாட்கள் பயணித்து மகாநந்தியாவை பார்க்க இந்தியா வந்துள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் காதல் வசப்பட்டு உள்ளனர். சார்லட்டின் ஓவியம் ஒன்றை 10 நிமிடங்களில் வரைந்து தந்து விடுவேன் என அளித்த வாக்குறுதியால் சார்லட் மகிழ்ந்து போயுள்ளார்.

அப்போது, இந்திய ஜனாதிபதியாக (பொறுப்பு) இருந்த பி.டி. ஜாட்டி உள்பட அரசியல்வாதிகளின் ஓவியங்களையும் மகாநந்தியா வரைந்து உள்ளார். சார்லட்டின் அழகை மகாநந்தியா பாராட்டியுள்ளார். பதிலுக்கு இவரது எளிமையால் சார்லட் கவரப்பட்டு உள்ளார்.

இதுபற்றி மகாநந்தியா கூறும்போது, எனக்கானவள் அவள் என்று எனக்கு உள்ளே இருந்து குரலொன்று ஒலித்தது. முதல் சந்திப்பிலேயே காந்தங்களை போன்று ஒருவரையொருவர் ஈர்த்து விட்டோம். முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதல் அது என கூறுகிறார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்வதற்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் சார்லட்டோ, சுவீடனுக்கு திரும்ப வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசத்தில், அவருடன் மகாநந்தியா செல்ல முடியவில்லை. கடிதங்கள் வழியே ஓராண்டாக இரண்டு பேரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதன்பின் 1977-ம் ஆண்டு மகாநந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்து உள்ளார். தன்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் விற்று சைக்கிள் ஒன்றை வாங்கி உள்ளார். அதன்பின், இந்தியாவில் இருந்து சுவீடனுக்கு பயணம் மேற்கொண்டார்.

இவருக்கு ஓவியம் கைகொடுத்து உள்ளது. வழியில் மக்களின் ஓவியங்களை வரைந்து கொடுத்து உள்ளார். அதில், சிலர் பணம் கொடுத்து உதவியுள்ளனர். சிலர் உணவும், புகலிடமும் தந்து உள்ளனர். காதல் பிரபஞ்சத்தின் மொழி என நினைக்கிறேன். அதனை மக்கள் புரிந்து உள்ளனர் என்று மகாநந்தியா கூறுகிறார்.

4 மாதங்கள், 3 வாரங்கள் கழித்து ஒரு வழியாக, தினசரி 70 கி.மீ. என்ற விகிதத்தில் சைக்கிளை அழுத்தி சென்று தனது காதலியை அடைந்து உள்ளார். ஆனால், விசயம் அத்துடன் முடியவில்லை.

அதன்பின்னர், சுவீடனில் சார்லட்டின் பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வதற்கு பெரிய அளவில் போராடி உள்ளார். அவர், இப்போது தனது மனைவி சார்லட் மற்றும் 2 குழந்தைகளுடன் சுவீடனிலேயே வசித்து வருகிறார்.

காதலியை கரம் பிடிக்க தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, ஒரு சைக்கிள் வாங்கி, அதில் பல மாதங்கள் மனவுறுதியுடன் பயணித்து சென்று சுவீடனை அடைந்து காதலுக்கு எடுத்துக்காட்டாக மகாநந்தியா வாழ்ந்து வருகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.