புதுடெல்லி: ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தனது அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அங்குள்ள அஜ்மீருக்கு மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் வகையில் வரும் மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு மூன்றாவது முறையாக வருகிறார். இக்கூட்டம் பிரதமர் மோடி அரசின் 9-ம் ஆண்டு நிறைவு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமது ஆட்சியின் சாதனைகளையும் ராஜஸ்தானுக்காக செய்த வளர்ச்சித் திட்டங்களையும் எடுத்துரைக்க உள்ளார். இத்துடன், அவரது அரசின் 9-ம் ஆண்டு நிறைவுக்காக நாடு முழுவதிலும் ‘மகா ஜன் சம்பக்’ எனும் பெயரில் கொண்டாடப்படும் விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் கூட்டத்தை தொடர்ந்து பாஜகவின் தேசியத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் ராஜஸ்தான் முழுவதிலும் ஒரு மாதம் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கின்றனர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான சூழல் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு, முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில இளம் தலைவரான சச்சின் பைலட் இடையே தொடரும் மோதல் முக்கியக் காரணமாகி விட்டது. இதற்கான பலன் இந்தமுறை தேர்தலில் தனக்கு கிடைக்கும் என பாஜக எண்ணுகிறது. இத்துடன், இமாச்சல பிரதேசத்தை போன்ற ஒரு சூழலும் தமக்கு சாதகம் என பாஜக கருதுகிறது.
இமாச்சலபிரதேசத்தில் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. கடைசியாக அங்கு நடந்த தேர்தலில் பாஜகவிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் பறித்தது. இதேபோல், கடந்த 1998-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முதல் காங்கிரஸும் பாஜகவும் ராஜஸ்தானில் ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட்டும் பாஜகவின் வசுந்தராராஜேவும் ஒருவருக்கு பின் ஒருவராக முதல்வராக தொடர்கின்றனர். எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவிற்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்காக, பாஜகவிலும் உருவான கோஷ்டி மோதலை சமாளிக்க மாநிலத் தலைமையில் சில மாற்றங்களை கட்சி மேலிடம் செய்திருந்தது. எனினும், வசுந்தராவையே மீண்டும் முதல்வராக நிறுத்தும் எண்ணம் பாஜகவிடம் இல்லை.
இவருக்கு பதிலாக சமீபத்தில் மத்திய சட்ட அமைச்சராக்கப்பட்ட அர்ஜுன்ராம் மெக்வால் முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன. தலித் சமூகத்தை சேர்ந்த இவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாக உள்ளார். இவர் ராஜஸ்தான் முதல்வரானால், பாஜக சார்பில் தலித் சமூகத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையை பெறுவார். பழங்குடி சமூகத்தின் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி பாஜக ஏற்கெனவே இதுபோன்ற ஒரு சாதனையை படைத்தது நினைவு கூரத்தக்கது.