கொடைக்கானல்: தமிழகத்திற்கு கடந்த மார்ச் வரை 2.67 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 6.64 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று (மே 25) மாலை வந்தார். அவர் சின்னப்பள்ளம் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பது குறித்தும், படகு குழாம், தொலைநோக்கி இல்லத்தில் தொலைநோக்கியின் செயல்திறன் மற்றும் ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் அறைகள், உணவு விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழகம் முழுவதும் 28 ஹோட்டல்களை நேரடியாக நிருவகித்து வருகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது.
தமிழகத்திற்கு கரோனாவுக்கு பிறகு 2021-ல் 57,622-ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ல் 4,07,139-ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டும் 2,67,773 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதே போல், உள் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021-ல் 11.53 கோடியில் இருந்து 2022-ல் 21.85 கோடியாக உயர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 6.64 கோடி பேர் சுற்றுலா வந்துள்ளனர்” என்றார்.
ஆய்வின் போது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் சுதா ஆகியோர் உடனிருந்தனர்.