சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசியில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் விஜய் நடிக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது.
இயக்குநர் அட்லீ தெறி படத்தின் பாலிவுட் ரீமேக்கில் மேற்பார்வை பணிகளில் ஈடுபட உள்ள நிலையில் தான் அட்லீ – விஜய் படம் தள்ளிப் போனது என்றனர்.
ஆனால், சமீபத்திய தகவல் என்னவென்றால் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு விஜய்க்கு பதிலாக வேறு சில நடிகர்களை பரிந்துரை செய்து வருவதாக கூறுகின்றனர்.
ஒதுங்கிய சன் பிக்சர்ஸ்: விஜய்க்கு சம்பளம் 200 கோடி படத்தின் பட்ஜெட் 400 கோடி என சமீபத்தில் அட்லீ படம் பற்றிய தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய்க்கு 200 கோடி சம்பளம் அதிகம் என யோசித்தே சன் பிக்சர்ஸ் அந்த படத்தை கை விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாலிவுட் நடிகர்களே அதிகப்படியாக 200 கோடி சம்பளத்தை ஒரு சிலரை தவிர பலரும் வாங்குவதில்லை என்றும் விஜய் படத்துக்கு 200 கோடி சம்பளமா என்கிற எண்ணத்திலேயே சன் பிக்சர்ஸ் அந்த ஐடியாவை கை விட்டு விட்டதாக கூறுகின்றனர்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்திற்கு பக்கத்து ஸ்டேட் பெரிய ஹீரோக்களை ஃபிக்ஸ் பண்ணும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
விஜய்க்கு பதில் யஷ்: 1200 கோடி வசூல் வேட்டையை வெறும் 100 கோடி பட்ஜெட் படத்தைக் கொண்டே நிகழ்த்திய கன்னட நடிகர் யஷ்ஷை வைத்து படம் பண்ணலாம் என்கிற முடிவுக்கே சன் பிக்சர்ஸ் வந்து விட்டதாகவும், ஷாருக்கானின் ஜவான் படம் வெளியான உடனே அட்லீ – சன் பிக்சர்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.
கேஜிஎஃப் 2வுக்கு பிறகு நடிகர் யஷ்ஷின் மார்க்கெட் சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதால் இயக்குநர் ஷங்கர், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட தமிழ் இயக்குநர்கள் யஷ்ஷை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
அல்லு அர்ஜுனும் லிஸ்ட்டில் இருக்காரு: ஒருவேளை யஷ் கேஜிஎஃப் 3 படத்தில் பிசியாகி விட்டாலோ அல்லது வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டாலோ அவருக்கு பதிலாக புஷ்பா 2வை முடித்து விட்டு வரும் அல்லு அர்ஜுனையாவது லாக் செய்து விட வேண்டும் என்றும் யஷ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு பான் இந்தியா ரீச் இருந்தாலும் அவர்கள் பெரிய தொகையை சம்பளமாக இதுவரை கேட்பதில்லை என்பதால் அந்த இருவரில் ஒருவரை அட்லீயின் அடுத்த படத்திற்கு ஹீரோவாக்க சன் பிக்சர்ஸ் முயற்சி செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.