புதுடெல்லி: சுமார் 50 குழந்தைகளை திருடி 4 மாநிலங்களில் விற்பனை செய்த 10 பேர் கும்பல் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. தமிழரான வாரணாசி ஏசிபி டி.சரவணன் தலைமையில் துப்பு துலக்கியப் படைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பேலுபூரில் கடந்த மே 14-ம் தேதி நான்கு வயது ஆண் குழந்தை காணாமல் போனது. சாலையோரம் வசிக்கும் இதன் குடும்பத்தினர் இரவில் உறங்கும்போது குழந்தை திருடப்பட்டது.
குழந்தையை அதன் பெற்றோர் பல நாட்கள் தேடியும் கிடைக்காமல், பேலுபூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்களிடம் வாரணாசி குற்றப்பிரிவு உதவி ஆணையரான (ஏசிபி) சரவணன், எனும் தமிழர் நேரடியாக விசாரணை நடத்தினார். வாரணாசி நகர சாலைகளின் சிசிடிவி பதிவுகளிலும் அவர் கவனமாகத் தேடியுள்ளார்.
இதில், திருடப்பட்ட குழந்தையை காரில் கொண்டுசென்ற ஓட்டுநர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஷிக்கா எனும் பெண் தலைமையில் பெரிய திருட்டுக் கும்பல் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஏசிபி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் படை புலனாய்வில் இறங்கியது. உ.பி., ஜார்க்கண்ட், பிஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இக்குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் விற்பனை செய்யும் கும்பல் சிக்கியது.
இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களில் சுமார் 50 குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் விசாரணை மேலும் தொடர்கிறது. ஜார்க்கண்டின் ஒரு வீட்டில் மறைந்திருந்த இக்கும்பலின் தலைவி ஷிக்காவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வாரணாசியில் திருடப்பட்ட 3 கைக்குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஏசிபி சரவணன் கூறும்போது, “காணாமல் போகும் குழந்தைகள் மீது போலீஸில் புகார் செய்வது உள்ளிட்ட அதிக கவனம் செலுத்தாதவர்கள் இக்கும்பலால் குறி வைக்கப்பட்டிருந்தனர். இதில், சாலையோரம் வசிப்பவர்களும், பரம ஏழைகளும் சிக்கியிருந்தனர். இந்த திருட்டில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே குறி வைக்கப்பட்டுள்ளன. இக்குழந்தைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன” என்றார்.
குழந்தைகளை பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆதார், ரேஷன் போன்ற எந்தவித அடையாள அட்டையும் இல்லை. இதன் காரணமாக, இவர்களது புகாரில் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் சுணக்கம் காட்டுவதும் தொடர்ந்துள்ளது. இவர்களில் ஒரு தம்பதியான சன்ந்தா, சஞ்சய் அளித்த புகாரை ஏசிபி சரவணன் விசாரித்ததால் இக்கும்பல் சிக்கியுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்: வட மாநிலங்களில் குழந்தைகளை திருடி விற்பவர்களில் தற்போது சிக்கிய கும்பல் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் சிக்கியதால், ஏசிபி சரவணன் தலைமையிலான புலனாய்வு படைக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான டி.சரவணன், 2019 பேட்ச்-ல் உ.பி. மாநில அதிகாரியானவர்.