இஸ்லாமாபாத் : இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ஆம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவப் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனைக் கண்டித்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர்.
லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் சேதப்படுத்தினர். இதையடுத்து இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (PTI) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கான், அவரது புஷ்ரா பீவி மற்றும், பிடிஐ கட்சி தலைவர்கள் முராத் சயீத், மலீகா புகாரி, ஃபவாத் சௌத்ரி மற்றும் ஹம்மாத் அசார், காசிம் சூரி, ஆசாத் கைசர், யாஸ்மின் ரஷீத் மற்றும் மியான் அஸ்லாம் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஷெபாஸ் ஷெரீப் அரசு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், நாட்டின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் போன்ற நிலைமை இருப்பதாகவும், தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.