சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D-50’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. இதுகுறித்து தனுஷின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இங்கே…
செல்வராகவனின் ‘சாணி காயிதம்’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த மாதமும், அதற்கு அடுத்த மாதம் டீசரும் வெளியாகின்றன. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு, அடுத்த மாதத்தோடு நிறைவடைகிறது.
இதனை அடுத்தே, தனுஷ் தனது 50வது படமான ‘D50’ படத்திற்கு வருகிறார். வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பிற்காக லொக்கேஷன் தேடி வருகின்றனர். D50 இன்ட்ரோ போஸ்டரில் காட்டிய இடம் போல, அரங்கம் அமைக்க உள்ளனர். அதற்காக லொக்கேஷனை இரவும் பகலுமாகத் தேடிவருகின்றனர். அரங்கம் அமைக்கும் வேலைகளே ஒரு மாதம் எடுக்கும் என்பதால், ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்குச் சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இதில் ஹைலைட்டே தனுஷ் ரசிகர்களும் சரி, இயக்குநர் வெற்றிமாறனின் ரசிகர்களும் சரி, அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது `வடசென்னை 2’க்குத்தான். இந்தப் படமும் வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் இதன்மீது கூடுதல் எதிர்பார்ப்பு வந்துள்ளது.
ஜூலை 28ல் தனுஷின் பிறந்தநாள் வருகிறது. அன்று ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரும், ‘D50’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகலாம். ‘D50’யில் விஷ்ணு விஷாலும், காளிதாஸ் ஜெயராமும் முடிவாகிவிட்டனர். ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார் சந்தீப் கிஷன். எனவே, அவர் இந்தப் படத்திலும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது இன்னமும் உறுதியாகவில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கமிட் ஆகியிருந்தனர். ஒரு ஷெட்யூலுக்கும் குறைவாகப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. எனவே அதில் நடிக்கவிருந்த எஸ்.ஜே.சூர்யாவும் தனுஷின் குட்புக்கில் உள்ளார். ஆகவே ‘D50’யில் அவர் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் அண்ணன் கதாபாத்திரத்திலிருந்தாலும், அவர்தான் வில்லன் என்றும் பேச்சு எழுந்துள்ளது.
இவர்களைத் தாண்டி, வேறு சிலரிடமும் பேசி வருகின்றனர். தனுஷே படத்தின் இயக்குநர் என்பதால் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டே நடிகர்கள் தேர்வில் இறங்குவார் என்றும் சொல்கிறார்கள்.