புதுடெல்லி: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சோழர்கால மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது.
தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மிகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே சோழர் கால மாதிரி செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது. இது தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு கேலரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதையடுத்து, அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள செங்கோல் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் அருங்காட்சியகத்தில் இருப்பது பொருத்தமற்றது என எங்கள் அரசு கருதுகிறது. இதை நிறுவுவதற்கு சிறந்த இடம் நாடாளுமன்றத்தைவிட பொருத்தமான வேறு இடம் இருக்க முடியாது. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனம் பிரதமர் மோடியிடம் இந்த செங்கோலை வழங்குவார். அதன் பிறகு அது மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே நிறுவப்படும்” என்றார்.