புதுடெல்லி: உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பாஜகவினர் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து சிலர் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு நான் தெளிவான பதில் அளித்தேன். இது புத்தர், காந்தி பிறந்த பூமி. எதிரிகளுக்கும் இரக்கம் காட்டுவது நமது மரபு என்று கூறினேன்.
சர்வதேச அரங்கில் இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா மீது உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. இன்றைய சூழலில் இந்தியா என்ன சிந்திக்கிறது என்பதை அறிய ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு காத்திருக்கிறது.
பப்புவா நியூ கினி நாட்டின் தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். தமிழ் மொழி நமது மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியரின் மொழி ஆகும். உலகின் மிகவும் பழமையான மொழி ஆகும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கலந்து கொண்டார். அந்த நாட்டின் ஆளும் கட்சியினர் மட்டுமன்றி எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதுதான் உண்மையான ஜனநாயகம்.
ஒருமுறை லண்டனுக்கு சென்றிருந்தேன். அன்றைய இங்கிலாந்து ராணி எலிசபெத் என்னை தன்னுடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். எனக்காக சிறப்பான முறையில் சைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தி, ராணி எலிசபெத்துக்கு அளித்த கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். இப்போதைய வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போதும் எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது எனக்கு கிடைத்த பெருமை கிடையாது. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை ஆகும். மூன்று நாடுகளின் சுற்றுப் பயணத்தின்போது ஒவ்வொரு நிமிடத்தையும் இந்தியாவின் வளர்ச்சிக்காகவே செலவிட்டேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
“ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் அந்த நாட்டு பிரதமர், முன்னாள் பிரதமர், ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் கலந்து கொண்டதை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதற்கு உள்அர்த்தம் இருக்கிறது. தற்போது புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதை மறைமுகமாக சுட்டிக் காட்டி ஆஸ்திரேலியாவை போன்று இந்திய அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.