தமிழகத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கரூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அப்பொழுது செய்தியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க முயன்றனர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது செய்தியாளர்களை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையானது சென்னையில் உள்ள என் வீட்டிலும் கரூரில் உள்ள என் வீட்டிலும் நடைபெறவில்லை.
என்னுடைய சகோதரர் வீட்டிலும் அவர் சார்ந்த இடங்களிலும் தற்பொழுது வருமானவரித்துறையை சோதனையானது நடைபெற்று வருகிறது. வருமானவரி துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்பொழுது காவல்துறை அல்லது மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வருவார்கள்.
அப்படி யாரும் பாதுகாப்புக்காக வராததால் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள டாஸ்மாக் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.