நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் அரசு டாக்டரை ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு பெயர் போன இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விவரம் வருமாறு:- திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி, புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறி மிரட்டியதோடு ஹிஜாப்பை கழற்ற வேண்டும் எனவும் கூறி மருத்துவரை பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழற்ற சொல்லி வாக்கு வாதத்தில் பாஜக நிர்வாகி ஈடுபட்ட செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு திரண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து விரைந்து வந்த போலீசா்ர், இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுத்ததால் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனார்.
இதையடுத்து, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்லது. இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் கூறுகையில், ”இதுபோன்ற சமூக விரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.