புதுடெல்லி: கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட யு.டி. காதர், கடந்த 24-ம் தேதி சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 24 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கான இலாகாக்கள் குறித்தும் முடிவு சய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இவர்கள் 24 பேரும், நாளை அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
இதை முன்னிட்டு, டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியையும் சந்தித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள சித்தராமையா, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன் என தெரிவித்துள்ளார்.