பீஜிங்: சீனாவில் புதிய கரோனா அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” கரோனா பரவல் சீனாவில் முற்றிலும் பூஜ்ஜியமான நிலையில் ஒமிக்ரான் திரிபு உடைய XBB என்ற புதிய வகை கரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என்றும் அப்போது வாரத்திற்கு 6.5 கோடி பேர் இந்த வகை கரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். XBB என்ற வகை கரோனாவை தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் பொருட்டு XBB வைரஸை தடுக்க XBB. 1.9.1, XBB. 1.5, என்ற இரண்டு புதிய தடுப்பூசிகளை சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷானை மேற்கோள்காட்டி இருக்கிறார். மேலும் 4 தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி தர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்த வகை கரோனாதொற்றினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் வயதானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமான இடங்களை தவிர்க்கவும், முகக்கவசங்கள் அணியவும் சீன மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் பரவியது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் ஆனால் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.