`கல்விக்குத் தடை விதித்த தாலிபான்கள்’ – மாற்று வழியில் சென்னை ஐஐடியில் எம்.டெக் முடித்த ஆப்கன் பெண்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு அந்நாடு முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதல் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. கல்வி, வெளியில் செல்வது, வேலை போன்ற எதிலும் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அத்தனை தடைகளையும் மீறி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் ஐஐடி மெட்ராஸில் தன் எம்.டெக் படிப்பை முடித்துள்ளார்.

தாலிபான்கள்

தெற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் 26 வயதான பெஹிஸ்டா. இவர் 2021-ம் ஆண்டுக்கு முன்பு, தன் எம்.டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை மெட்ராஸ் ஐஐடி-யில் தொடர விரும்பி அந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார். அங்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைந்த அந்த மாணவிக்கு கல்லூரியில் சேர சீட் கிடைத்துள்ளதாக மெயில் வந்துள்ளது. அந்த நேரத்தில் தாலிபான்களால் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்ட பெஹிஸ்டா, தன் நிலையை விவரித்து ஐஐடி நிர்வாகத்துக்கு பதில் மெயில் அனுப்பியுள்ளார். அவரின் நிலை அறிந்து ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மற்றும் பேராசிரியர் ரகு ஆகியோர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட பெஹிஸ்டா, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் WI-FI இணைப்பு எடுத்து இணையம் மூலமாகவே தன் இரண்டு வருடப் படிப்பை முடித்துள்ளார். அதேபோல் அனைத்து செமஸ்டர்களையும் ஆன்லைனில் எழுதியுள்ளார், தற்போது ஐஐடி மெட்ராஸில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பெஹிஸ்டாவும் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசியுள்ள அந்த மாணவி, “தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நேரத்தில் நான் கெமிக்கல் இன்ஜினீயரிங் முதுகலை பட்டப்படிப்புக்காக ஐஐடி மெட்ராஸை தேர்வு செய்திருந்தேன்.

ஐஐடி மெட்ராஸ்

பின்னர் நேர்காணலில் தேர்ச்சி பெற்றதாக எனக்கு தகவல் வந்தது ஆனால் எங்கள் நாடு தாலிபான்கள் பிடியில் இருந்ததால் என்னால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை, இதனை மெயில் மூலம் கல்லூரிக்குத் தெரியப்படுத்தினேன். பேராசிரியர் ரகு எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். பின் இரண்டு வருடங்கள் ஆன்லைன் மூலம் எனது படிப்பு தொடர்ந்தது. முதல் இரண்டு செமஸ்டர்கள் மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் கடுமையாகப் படித்து மீதமுள்ள செம்ஸ்டர்களை எளிதாக முடித்தேன்.

நான் ஆப்கானிஸ்தானில் முடித்த பி.டெக் படிப்புடன் மெட்ராஸ் ஐஐடி படிப்பை ஒப்பிடுகையில் இங்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானிலும் இது போன்ற ஒரு கல்வி முறையின் அவசியத்தை உணர்கிறேன்.

அதிகாரம் இருப்பதால் தாலிபான்கள் தலை, கால் புரியாமல் ஆடுகின்றனர். அவர்கள் என்னைத் தடுத்து வைக்க நினைத்தனர். ஆனால் நான் மாற்று வழி மூலம் என் இரண்டு வருடப் படிப்பை முடித்துள்ளேன்.

Online class (Representational Image)

இதுவரை ஆப்கான் மொழியில்தான் நான் படித்து வந்தேன். மெட்ராஸ் ஐஐடியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கிலம் கற்றுக்கொண்டு எம்.டெக் படிப்பைத் தொடர்ந்தேன். தற்போது நான் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். பேராசியர் ரகு எனக்கு மிகவும் உதவி செய்தார். இரவில் நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கி மீதமுள்ள நேரத்தை கல்விக்கு செலவு செய்து இரண்டு வருடப் படிப்பை முடித்தேன்” என அந்த மாணவி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.