சென்னை: ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.. மற்றொருபுறம், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் எடுக்கப்பட்ட, 2 வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி இஸ்லாமிய பெண் டாக்டர் நைட் டியூட்டியில் இருந்தார். அப்போது, தங்கள் மத வழக்கப்படி அவர் ஹிஜாப் அணிந்துள்ளார்.
நோயாளி ஒருவருக்கு சிகிச்சை தந்து கொண்டிருந்தபோது, புவனேஷ் ராம் என்பவர் அங்கு வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்தவர்.. பாஜக நிர்வாகியும்கூட..
யார் நீங்கள்:
பெண் மருத்துவரிடம், “நீங்க டியூட்டில இருக்கீங்க.. உங்க யூனிஃபார்ம் எங்கே? நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க? நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு.. MD அரவிந்த் டாக்டர் எங்கே? நீங்கதான் டாக்டரா? நீங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு? ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கீங்களே” என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.. அத்துடன், இதை தன்னுடைய செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்..
இதனிடையே, அந்த பெண் மருத்துவர், “பெண்கள் டியூட்டியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார்.. ஒரு லேடி டாக்டரை, அவரது அனுமதியில்லாமல் வீடியோவும் எடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று சொல்லி அவரும் பதிலுக்கு செல்போனில் வீடியோ எடுத்தார்..
இந்த 2 வீடியோக்களும்தான் சோஷியல் மீடியாவில் வேகவேகமாக பரவி கொண்டிருக்கிறது.. இந்த விஷயம் தெரிந்த, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.. கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விசிக போன்ற கட்சிகள், சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர்…
கலைந்து சென்றனர்:
தகவலறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்திருக்கிறார்கள்.. அந்த பாஜக நிர்வாகி இப்போது தலைமறைவாக உள்ளார்.. அதனால், 6 பேர் கொண்ட டீம் அமைக்கப்பட்டு, அவரை தேடி வருகிறார்கள்.
இதனிடையே, ஹிஜாப் அணிந்திருந்தால் மிரட்டுவதா? பெண் மருத்துவரை மிரட்டியவரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா காட்டமாக வலியுறுத்தி உள்ளார்.
ஹிஜாப் அணிந்தால்?:
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.. “நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால், பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் தகராறில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டியூட்டி டாக்டர்:
ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியின் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தின் கீழாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசை ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.