வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக அமைச்சர்களில் முக்கியமானவராக கருதப்படுவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் எப்போதும் இவர் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கும். டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பது குறித்து பேசி சமீபத்தில் சமூகவலைதளங்களில் ட்ரெண்டானார். அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் கேட்டு கலங்கடித்தார்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலஜியின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் வந்த காரையும் சேதப்படுத்தினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, மத்திய துணை ராணுவப்படையை இறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடினார். ஒன்னும் இல்லனா வீட்ட திறந்து காட்டி இருக்க வேண்டியது தானே என சீமானும் சீறினார். இந்தசூழலில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, ‘‘முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனது இல்லத்தில் ஐடி ரெய்டு நடைபெறவில்லை. எனது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் தான் ரெய்டு நடத்தப்பட்டது.
நண்பர் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர். கரூரில் சில அசம்பாவிதங்கள் நடந்தை அறிந்த உடனே அங்கே இருக்கும் நிர்வாகிகளை அழைத்து பேசினேன். நான் பேசிய உடனேயே அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். என்னை குறிவைத்து சோதனைகள் நடத்தப்படுவது புதியது அல்ல, ஏற்கனவே பலமுறை எதிர்கொண்டுள்ளேன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சோதனை நடைபெற்றது. பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியபோது, பிரச்சாரத்தில் நான் கலந்து கொள்வதை தடுக்க எனக்கு அங்கிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு முதல், இன்று வரை ஒரு சதுர அடி நிலத்தைக் கூட நானோ எனது குடும்பத்தினரோ பதிவு செய்யவில்லை. எனவே இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம், தேர்தல் முடிந்த பிறகு என்ன வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன், விளக்கம் அளிக்கிறேன் என கூறினேன். எனவே எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்கள் சோதனை செய்ய செய்யட்டும். அவர்கள் கேட்கும் ஆவணங்களை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அதேபோல் எனது உறவினர்களும், சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தயாராக இருக்கின்றனர்’’ என்று கூறினார்.