கலிபோர்னியா: வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் வெகு விரைவில் பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை மறைக்கும் வகையில் தனித்துவ பயனர் பெயரை பயன்படுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பயனர்கள் தனித்துவ பெயர்களை தங்களது பயனர் பெயராக பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்து ட்ராக் செய்து வரும் WAபீட்டாஇன்போ தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர் பெயர் இந்த செயலியில் இடம் பிடிக்கும் என தெரிகிறது.
ஏற்கெனவே சிக்னல் போன்ற மெசேஜிங் செயலியில் பயனர்கள் தங்களது பயனர் பெயரை கொண்டு லாக்-இன் செய்யலாம். அதே பாணியில் வாட்ஸ்அப் தளமும் இயங்கும் என தெரிகிறது. இதன் மூலம் பயனர் விவரங்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும் என தெரிகிறது. அதேபோல வாட்ஸ்அப் எண்ணை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் ‘ஸ்பேம்’ தொலைபேசி அழைப்புகளுக்கு இதன் மூலம் முற்று வைக்கப்படும் எனத் தெரிகிறது.