சென்னை: செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும் பரபரப்பாகி வருகிறது.. அத்துடன் திமுக மேலிடமும் டென்ஷன் ஆகியுள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பாக சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..
விடிகாலை பரபரப்பு: இன்று விடிகாலையிலேயே இந்த சோதனை ஆரம்பமாகிவிட்டதால், தமிழகமெங்கும் பரபரப்பு அப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கோவை, கரூர் வீடு உள்ளிட்ட இடங்களிலும், அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனைகளை துவங்கினர். செந்தில் பாலாஜி அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள், ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வந்தன.. சில நாட்களுக்கு முன்புதான், சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் மறுபடியும் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
அதிரடி ரெய்டு: அதே நேரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி கேட்டதற்கு, சுப்ரீம் கோர்ட் அப்போது மறுத்துவிட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு, இடங்களில் இன்று சோதனையை ஆரம்பித்தனர்…
மாஜிக்கள்:
அரசியல் கட்சி தலைவர்களிடம் ரெயிடுகள் நடத்தப்படுவது சகஜம்தான் என்றாலும், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் ரெயிடுக்கு பல்வேறு பின்னணி காரணங்கள் அரசியல் ரீதியாகவே சொல்லப்பட்டு வருகின்றன.. வழக்கமாக, கடந்த கால ஆட்சியில் நடந்த ஊழல்களை அடிப்படையாக கொண்டே ரெய்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.. அப்படித்தான், தற்போதைய ஆளும் திமுக அரசும், மாஜிக்களிடம் ரெய்டை நடத்தியது.. ஆனால், ஆளும் கட்சியையே அசைத்து பார்க்கும் வகையில், அமைச்சர் தரப்பில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது..
சுருக்கமாக சொன்னால், அதிமுகவுக்கு திமுக “செக்” வைத்தால், திமுகவுக்கு பாஜக “குறி” வைத்துள்ளது.. முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்துள்ளது..
அடுத்து என்ன?:
அதுமட்டுமல்ல, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அரசு அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இது போன்ற ரெய்டுகளை நடத்துவதாக, திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் கிளப்பி விடப்பட்டு வருகின்றன.. இந்த ரெய்டின் முடிவு எப்படி இருக்க போகிறது? அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், மிகப்பெரிய அதிர்வலை திமுகவுக்குள் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்பட்டு வருகிறது.
இதெல்லாம் அரசியல் ரீதியான தாக்கம் என்றாலும், இதுவரை எங்கும் நடக்காத வகையில், வன்முறை தாக்குதல்கள் இந்த ரெய்டுகளில் வெளிப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த பேருக்கும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
செந்தில் பாலாஜி:
தங்களை சோதனை செய்ய விடாமல் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், அவரது தம்பி அசோக்கின் ஆதரவாளர்கள்ம் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் குறிப்பாக தங்கள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது பரபரப்பை கிளப்பி உள்ளது.. மற்றொருபுறம், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் புகார் கொடுக்க வந்திருப்பதால் கூடுதல் டென்ஷன் எகிறி உள்ளது..
வருமான வரித்துறை அதிகாரிகளும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும் மாறி மாறி புகார் தெரிவித்து வரும்நிலையில், கரூர் போலீசாரும் விசாரணையை துரிதமாக்கி வருகின்றனர். ஆனால், அதற்குள் ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும், காரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவமும், வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுவிட்டது… இப்படி ரெய்டு + தாக்குதல் என இரட்டிப்பு பரபரப்பு கூடிவருகிறது.
முதல்வர் ஸ்டாலின்:
இந்நிலையில்தான், வெளிநாட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, வருமானவரித்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளரிடமும், டிஜிபியிடமும் உடனடியாக ஆலோசித்துள்ளார். திமுக உள்ளிட்ட யாராக இருந்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட்டிருக்கிறாராம்..
அதுமட்டுமல்ல, வருமானவரித்துறையினர் கோரிக்கை வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்குக்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்றும் சற்று காட்டமாகவே வலியுறுத்தியிருக்கிறராம் முதல்வர் ஸ்டாலின். பிறகு, செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு “செம டோஸ்” கொடுத்தாராம் முதல்வர் ஸ்டாலின்.. இதன் பிறகு, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆர்.எஸ். பாரதியிடமும் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.. இதையடுத்துதான், பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் தந்தாராம் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி..!!
இதனிடையே, இந்த ரெய்டு குறித்து அரசியல் நிபுணர்கள் நம்மிடம் சொல்லும்போது, “இப்படி ஒரு ரெயிடு நடந்ததுகூட திமுகவின் நன்மைக்கு என்றே சொல்லலாம்.. காரணம், “பாஜக – திமுக மறைமுக டீலிங்கில் உள்ளது” என்று சிலர் கிளப்பிவிட்டு வருகிறார்கள்.. அவ்வளவு ஏன், அன்று பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஸ்டாலினிடமும், உதயநிதியிடமும் நெருங்கி பேசியதை வைத்து, பல்வேறு கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன. “திமுகவின் கள்ளக்காதலி பாஜகதான்” என்று சீமான் ஓபனாகவே சொன்னாரே? இப்போது, இந்த ரெயிடு மூலம் அதுபோன்ற வதந்திகள் எல்லாம் நொறுக்கப்பட்டுள்ளன” என்றனர்.
தேர்தல் விரக்தி:
இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒன்றை கவனித்தால் நன்றாக தெரியும்.. கர்நாடக தேர்தலுக்கு பிறகுதான், 2000 ரூபாய் விவகாரம் ஆரம்பமானது.. இப்படி ரெய்டுகள் நடக்கிறது.. செங்கோல் விவகாரம் கிளம்பி உள்ளது.. இதெல்லாம் பார்த்தால், கர்நாடக தேர்தல் தோல்வி விரக்தியின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது” என்றார் சீனியர் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், அளித்துள்ள டிவி பேட்டியில், “எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.. கருப்பு பணத்தை ஒழிப்பதாக பாஜக அன்று சொன்னதே? அப்படியானால், செந்தில் பாலாஜியிடம் இப்போது எப்படி கருப்பு பணம் இருக்கிறது? பாஜக ஆட்சிக்கு வந்துதான் 9 வருடம் ஆகிறதே? ஏன் இதுவரை கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை? இவர்களின் நோக்கம், திமுகவை முடக்க வேண்டும் என்பதுதான்.. ஆக மொத்தத்தில், அரசியல் ரெய்டுகள் என்பது, காலை சுற்றின பாம்பு.. அது கடிக்காது.. ஆனால், அங்குமிங்கும் நகர விடாமல் தடுக்கும்” என்று ஷ்யாம் தெரிவித்துள்ளார்.