சென்னை: Youtuber Irfan (யூட்யூபர் இர்ஃபான்) யூட்யூபர் இர்ஃபானின் கார் ஏற்படுத்திய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன.
பட்டையை கிளப்பும் இர்ஃபான்ஸ் வியூ:
அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் இர்ஃபான்ஸ் வியூ. இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இந்த யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை ஆரம்பத்தில் பதிவு செய்துவந்தார். அவரது எளிமையான பேச்சும், தேடி தேடி வித விதமாக உணவை சாப்பிட்டு அதுகுறித்த தனது ஒப்பினியனை பகிரும் வீடியோக்களை அப்லோட் செய்ததாலும் வெகு சீக்கிரத்திலேயே பிரபலம் ஆனார் இர்ஃபான். கிட்டத்தட்ட 4 மில்லியன் ஃபாலோயர்களை அவர் வைத்திருக்கிறார்.
பிரபலங்களுடன் இணைந்த இர்ஃபான்:
உள்ளூரில் மட்டும் வீடியோ செய்துகொண்டிருந்த இர்ஃபான் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அங்கிருந்து அவர் அப்லோட் செய்த வீடியோக்களும் பிரபலமடைந்தன.நடிகர் நெப்போலியன் மகனுக்காக அமெரிக்கா சென்றதும் குறிப்பிடத்தக்கது,. மேலும் தமிழ்நாட்டுக்குள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்கும் இவரை பலரும் ரசிக்கின்றனர்.
இர்ஃபான் திருமணம்:
பல ஆண்டுகள் காதலித்து வந்த தனது காதலியை இர்ஃபான் கடந்த 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்வின் காதலை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். யாருக்காக என் இதயம் என் வாழ்நாளின் இறுதி வரை துடிக்குமோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை” என குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை வாழ்த்து தெரிவித்தனர்.
கார் விபத்து:
இந்நிலையில் யூட்யூபர் இர்ஃபான் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தின் காரணமாக ஒரு மூதாட்டி உயிரிழந்துவிட்டதாகவும்; காரை இர்ஃபானின் நண்பர் ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.