புதுடில்லி :சத்தீஸ்கரில் நீர்த்தேக்கத்தில் விழுந்த தன் விலையுயர்ந்த மொபைல் போனை மீட்க, 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய அரசு அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்கேர் மாவட்டத்தின் கோயிலிபேடா பகுதியில், உணவுத் துறை அதிகாரியாக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ்.
இங்குள்ள கெர்கட்டா நீர்த்தேக்கத்திற்கு சமீபத்தில் வந்த ராஜேஷ், ‘செல்பி’ எடுக்க முயன்ற போது, கை தவறி அவரது மொபைல் போன், 15 அடி ஆழ நீர்த்தேக்கத்தில் விழுந்தது. இதனால் பதறிப் போன அவர், போனை எடுத்துத் தரும்படி, அப்பகுதி மக்களிடம் கூறினார்.
அவர்களும் நீர்த்தேக்கத்தில் குதித்து போனை தேடினர். எனினும், கண்டு பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, இரண்டு டீசல் பம்ப் செட்கள் வாயிலாக, நீர்த்தேக்கத்தில் இருந்த நீரை ராஜேஷ் வெளியேற்றினார். இப்படி மூன்று நாட்களுக்கு இயங்கிய பம்ப் செட்கள் வாயிலாக 21 லட்சம் லிட்டர் நீர் வீணாக வெளியேற்றப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த நீர்வளத் துறை அதிகாரிகள், நீரை வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். சட்ட விரோதமாக நீரை வெளியேற்றிய விவகாரத்தில், ராஜேஷ் விஸ்வாசை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டனர்.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ”மொபைல் போனில் முக்கிய அரசு தரவுகள் இருந்ததால், அதை உடனே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் நீரை வெளியேற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினேன்,” என்றார்.
இதற்கிடையே நீரை வெளியேற்றி போனை மீட்டும், அது வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement