திருவனந்தபுரம்:போலீஸ் குடியிருப்புகளிலும் சோதனை நடத்தும் அளவு போதை பொருட்கள் ஊடுருவியுள்ளதாகவும், ஒரு எஸ்.பி.,யின் இரண்டு பிள்ளைகள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறினார்.
கொச்சியில் நடந்த போலீஸ் அதிகாரிகள் சங்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கேரளாவில் ஒரு எஸ்.பி.,யின் இரண்டு பிள்ளைகளும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவரது குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் நம்துறையை சேர்ந்த ஒருவரின் மகள் போதைக்கு அடிமையாகி இறந்துள்ளார். போலீஸ் குடியிருப்புக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் குடியிருப்பிலும் போதை பொருட்கள் வந்து விட்டது. அங்கும் சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
போதையால் ஏற்படும் பிரச்னைகளை கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஏராளமானோர் போதைக்கு இரையாகி கொண்டிருக்கின்றனர். இதை தடுக்க போலீஸ் என்ன செய்கிறது என்பதை பொது மக்கள் உற்று நோக்கி கொண்டிருக்கின்றனர். போதை பொருள் பயன்பாடு தேசிய அளவில் 2.5 சதவீதம். கேரளாவில் இது 1.2 சதவீதம். இது திடீர் என்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நாம் அனைவரும் நிலைமையை உணர்ந்து செயல்படும் நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement