சிவகாசி: சிவகாசி மாநகராட்சி, ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி மாநகராட்சியில் 38,670 குடிநீர் இணைப்புகள் உள்ளது. தற்போது மாநகராட்சியில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டர், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டர், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சத்திற்கும் மேல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து குழாய் பதிக்கப்பட்டது. வெம்பகோட்டையில் நீரேற்று நிலையமும், சிவகாசியில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டது. சிவகாசியில் பிரதான சாலைகள் உட்பட அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற்றது. நிறைவடைந்த குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் திட்ட இணை நிர்வாக இயக்குநர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் நகராட்சியில் முடங்கியாறு குடிநீர் மூலம் தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இந்த நீர் 28 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு தினசரி நபர் ஒருவருக்கு 61 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் குழாய் அமைக்கும் பணிகள் முடிந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக 14 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சங்கரன்கோவிலில் நடந்த விழாவில் ராஜபாளையம், சிவகாசி உட்பட ரூ.570 கோடி மதிப்பிலான நிறைவடைந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க உள்ளது. ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என ஆணையர் என்.சங்கரன் தெரிவித்தார்.
ராஜபாளையம் நகராட்சியில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினசரி 1.30 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்க உள்ளது. இதன் மூலம் நகராட்சியில் தினசரி குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன், ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் அனைவருக்கும் தடையின்றி தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தெரிவித்தார்.