ஜப்பான் + திருப்போரூர் லிங்க்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்.. அசத்தல்!

டோக்கியோ : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து ஒசாகாவில் நேற்று நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ‘ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்’ தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

டைசல் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். டைசல் மேலாண் இயக்குநர் சிஹிரோ அவோகி உடனிருந்தார்.

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு 2024 ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் சென்னையில் நடத்தவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, கூட்டாளர் நாடாக ஜப்பான் ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகம் (எம்இடிஐ), ஜெட்ரோ நிறுவனம், ஜப்பான் வணிக, தொழில் பேரவை (ஜேசிசிஐ) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனகாவா, ஹிரோஷி மாகாணங்கள், பேங்க் ஆஃப் டோக்கியோ உள்ளிட்ட 3 வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,596 கோடி முதலீடு, 4,244 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 5 ஜப்பானிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழகத்தில் திட்ட அனுமதிகளை விரைவாகப் பெறும் வகையில், ஒற்றைச்சாளர போர்ட்டல் 2.0 மற்றும் ‘TNSWP’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இதனால், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருவதுடன், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறோம்.” என்றார்.

Key MoUS signed in the presence of CM Stalin in Japan

பின்னர், பல்வேறு ஜப்பானிய நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் பங்கேற்ற சந்திப்பில், ஒசாகா மாகாண துணைஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.