அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகளை தன் பக்கம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆளுக்கொரு பக்கம் நின்று கொண்டு அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஓபிஎஸ் சந்திப்பு – பதில் அளிக்க மறுத்த சசிகலாஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து வந்த நிலையில் சசிகலாவை இன்னும் சந்திக்கவில்லை. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதால் சந்திப்பு தள்ளிப்போவதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். ஆனால் ஓபிஎஸ் உடனான சந்திப்பு தள்ளிப்போவது குறித்து சசிகலா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மீண்டும் சசிகலா பேட்டி!நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். அடுத்து என்னை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சந்திப்பதால் மாற்றம் ஏற்படுமா என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில்தான் பார்க்க வேண்டும்.
இணையுமா மூன்று அணிகள்!ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளாரா, அதிமுக மூன்று அணியாக செயல்படுமா என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எல்லோரையும் ஒன்றாக இணைத்து செல்ல வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறேன். உண்மையான அதிமுக நாங்கள் தான். வரும் தேர்தலுக்குள் நாங்கள் எல்லாம் நிச்சயம் ஒன்று சேருவோம்” என்று கூறியுள்ளார்.
சசிகலா பாடும் பழைய பாடல்சசிகலா கூறுவது போல் அனைத்து அணையும் ஒன்றிணையுமா என்று அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். “சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதிருந்து அனைவரையும் ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறிவருகிறார். ஆனால் அதன் பின்னர் தான் ஓபிஎஸ் பிரிந்து வந்தார். சட்டமன்ற பொதுத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் தற்போது வரை ஓபிஎஸ்ஸையோ, டிடிவி தினகரனையோ, எடப்பாடி பழனிசாமியையோ அரசியல் நிமித்தமாக சந்திக்கவில்லை. ஆனால் தொடர்ந்து நான் ஒருங்கிணைப்பேன் என்பதை மட்டும் ராகம் மாறாமல் பாடி வருகிறார்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான்!நிர்வாகிகளை சந்திக்காமால், மக்களை, தொண்டர்களை அணி திரட்டாமல் அவ்வப்போது பேட்டியும் அறிக்கையும் கொடுத்து கொண்டிருந்தால் மட்டும் அதிமுகவை கைப்பற்றிவிட முடியாது. அமித் ஷாவை சசிகலா சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. டெல்லியை மட்டும் நம்பியிருந்தால் காரியம் நடக்காது. தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இல்லையென்றால் சட்டமன்றத் தேர்தல் போல் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும்” என்கின்றனர்.