கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.
இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லிக்கு புறப்பட்டு சென்று தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அதை தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியை, சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் சந்தித்து அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர். இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது. இதில் தேஷ்பாண்டே, லட்சுமண் சவதி, ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட மூத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், 24 அமைச்சர் பதவிகளும் நிரப்பப்படும் எனவும், காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.