சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன், ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜெய் நடித்த தீராக் காதல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
தொடர்ந்து த்ரில்லர் பட்ங்களாக கொடுத்து வந்த அருள்நிதி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கிராமத்து சூரனாக கழுவேத்தி மூர்க்கனாக வந்து கலக்கி உள்ளார்.
அதே சமயம் இந்த ஆண்டு 5வது படத்தை இறக்கி உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தீராக் காதல் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி உள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாசிட்டிவ் விமர்சனங்கள்:
அருள்நிதி நடிக்கும் படங்கள் பெரிதாக வசூல் ஈட்டவில்லை என்றாலும், வித்தியாசமான திரில்லர் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என பாராட்டுக்களை அள்ளி வந்தார். கடைசியாக வெளியான டைரி, தேஜாவு உள்ளிட்ட படங்களும் அருள்நிதிக்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளித் தந்த நிலையில், கழுவேத்தி மூர்க்கன் பிளாக்பஸ்டர் படத்திற்கான அம்சங்களை கொண்டு இருப்பதாக பல விமர்சகர்களும் பாராட்டி உள்ளனர்.
அதே போல ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நல்லா நடித்து வந்தாலும், கடைசியாக அவர் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் பாராட்டுக்களை அள்ளினாலும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டவில்லை. இந்நிலையில், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் லைகா தயாரிப்பில் வெளியான தீராக் காதல் படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
கழுவேத்தி மூர்க்கன் வசூல்:
கவுதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாளான நேற்று வெறும் 60 லட்சம் வசூல் தான் ஒட்டுமொத்தமாகவே வந்துள்ளதாக கூறுகின்றனர். சம்மர் விடுமுறையில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பெருமளவில் தியேட்டருக்குச் செல்வதை தவிர்த்து வருவதாக கூறுகின்றனர். word of mouth நன்றாக உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறுகளில் மேலும், வசூல் அதிகரிக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
தீராக் காதல் வசூ:
கிட்டத்தட்ட 6 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தீராக் காதல் திரைப்படம் முதல் நாளில் வெறும் 50 லட்சம் ரூபாயை மட்டுமே வசூல் செய்து ஸ்லோ ஸ்டார்ட் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு பிக்கப் ஆனால் தான் உண்டு என்கின்றனர்.
ஓடிடியில் லாபம்:
மினி பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தியேட்டர் வசூலை பெரிதாக நம்புவதில்லை என்றும் ஓடிடியில் வரும் லாபமே போதுமானதாக உள்ளதால் தான் தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்கள் உருவாகி வருவதாக கூறுகின்றனர். தியேட்டர் வசூல் எல்லாம் கூடுதல் போனஸ் தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தொடர்ந்து 5 படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அத்தனை படங்களும் தியேட்டரில் கல்லா கட்டவில்லை என்றாலும், ஓடிடியில் நல்ல காசு பார்த்து இருப்பதாக கூறுகின்றனர்.