பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இம்முறை எந்தப்பக்கம் பார்த்தாலும் சுப்மன் கில் பெயர் தான் ஒலிக்கிறது. அனைத்து அணிகளையும் பதம் பார்த்த இவர், நேற்று மும்பை பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். இவரது’மின்னல்’ வேக சதம் கைகொடுக்க, குஜராத் அணி 72 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. மும்பை அணி வெளியேறியது.
ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் தகுதிச் சுற்று-2ல் ‘நடப்பு சாம்பியன்’ குஜராத், ‘ஐந்து முறை சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. மழையால் 30 நிமிடம் தாமதமாக துவங்கியது. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
குஜராத் அணிக்கு சகா, சுப்மன் கில் ஜோடி கலக்கல் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ சகா (18) சிக்கினார். இதற்கு பின் சுப்மன் துாள் கிளப்பினார். 49 பந்தில் சதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய சுப்மன், கிரீன் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மத்வால் ‘வேகத்தில்’ சுப்மன் (129 ரன், 60 பந்து, 10 சிக்சர், 7 பவுண்டரி) வெளியேறினார். சாய் சுதர்சன் (43) ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனார்.
குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (28), ரஷித் கான் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூர்யகுமார் அரைசதம்
கடின இலக்கை விரட்டிய மும்பை அணியின் பேட்டர்கள் சொதப்பினர். நேஹல் வதேரா (4), கேப்டன் ரோகித் சர்மா (8) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்து தாக்கியதால் இடது கையில் காயமடைந்த கிரீன் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். திலக் வர்மா (43), ரஷித் கான் ‘சுழலில்’ போல்டானார். மீண்டும் களமிறங்கிய கிரீன்(30), லிட்டில் பந்தில் ஆட்டமிழந்தார்.
அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், லிட்டில்பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். மோகித் சர்மா வீசிய 15வது ஓவரில் சூர்யகுமார் (61) அவுட்டாக, மும்பை கனவு தகர்ந்தது. விஷ்ணு வினோத் (5), டிம் டேவிட் (2) நிலைக்கவில்லை. மோகித் பந்துவீச்சில் ஜோர்டான் (2), பியுஸ் சாவ்லா (0), குமார் கார்த்திகேயா (6) அவுட்டாகினர். மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ தோல்வியடைந்தது.
குஜராத் சார்பில் மோகித் 5 விக்கெட் வீழ்த்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement