வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டில் எம்.பி., ஒருவர் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் இணைந்து, இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் கிரேஸ்ட் மெங் என்ற எம்.பி., தீபாவளிக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த மசோதா பார்லிமென்டில், நிறைவேறி, அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்து போடும் போது சட்டமாகும்.
இது தொடர்பாக கிரேஸ்ட் மெங் கூறியதாவது : பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், குடும்பங்கள் ஆகியோருக்கு தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியமானது. தீபாவளி பண்டிகை அன்று விடுமுறை விடப்படுவதால், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும். பல்வேறு கலாசாரங்களை மதிப்பது என்ற அரசின் கொள்கை உறுதி செய்யப்படும். தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அனைவரும் கொண்டாடவும் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கிரேஸ்ட் மெங்கின் முயற்சிக்கு, நியூயார்க் செனட் உறுப்பினர் ஜெரெமி கோனே, நியூயார்க் சட்டசபை பெண் உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார், நியூயார்க் சிட்டி கவுன்சில் உறுப்பினர் சேகர் கிருஷ்ணன், சீக்கிய கூட்டமைப்பின் மூத்த கொள்கை ஆலோசகர் சிங் அட்டரிவாலா , இந்தோ கரீபிய கூட்டமைப்பின் ரிச்சர்ட் டேவிட், ஹிந்துக்களுக்கான மனித உரிமை அமைப்பின் கொள்கை இயக்குநர் ரியா சக்ரவர்த்தி, சர்வதேச அகிம்சை நிறுவனத்தின் தலைவர் நீடா ஜெயின் மற்றும் இந்திய வம்சாவளியினர் இதனை வரவேற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement