பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது.
வடகொரியாவில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியே அதற்கு முக்கிய காரணம். வடகொரியாவின் அதிபராக இப்போது கிம் ஜாங் உன் இருக்கிறார். அவர் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும் கூட அவரது நாட்டின் மக்கள் வறுமையான சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சட்டம்: மேலும், அங்கு விதிகளும் மிகக் கடுமையானதாக இருக்கும். ரூல்ஸை மீறினால், அங்கே மூன்று தலைமுறைகளுக்குத் தண்டனை விதிக்கப்படும். அதாவது இந்தியா உட்பட மற்ற நாடுகள் யாரேனும் ஒருவர் தவறு செய்தால், அவருக்கு மட்டும் தண்டனை வழங்கப்படும். ஆனால், வடகொரியாவில் மூன்று தலைமுறைக்கும், அதாவது குற்றம் செய்த நபர், அவரது தாய்- தந்தை மற்றும் அவரது குழந்தை என மூன்று தலைமுறைக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இந்த விதியால் அங்குப் பல குடும்பங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது வட கொரியாவில் பைபிளுடன் பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 2 வயதுக் குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும் இதை உறுதி செய்ய முடிந்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். 2022ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையின்படி, வட கொரியாவில் மட்டும் 70,000 பேர் கிறிஸ்தவர்களாக இருந்த ஒரே காரணத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பல குழந்தைகளுக்கு வெறும் இரண்டு வயதே ஆகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியக் குடும்பம்: அங்கே வடகொரியாவில் பைபிளை வைத்திருந்ததாக சொல்லி குடும்பத்தில் அனைவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கே உள்ள முகாம்களில் சிறை வைக்கப்பட்டனர். இரண்டு வயது சிறுவனும் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த முகாம்கள் மிக மோசமானதாகவும் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் ஒன்றாகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வடகொரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் 90%க்கு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.
மோசம்: அது குறித்து தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “வட கொரியாவில் எந்தவொரு மதத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்களைக் கைது செய்யும் வடகொரிய போலீசார், அவர்களை முகாம்களில் அடைக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டு கடுமையாக வேலை வாங்கப்படலாம்” என்று அவர் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்கா உட்படப் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் எந்தவொரு தூதரக உறவும் இல்லை. சமீபத்தில் வடகொரியாவில் தொடரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.