புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் ஒருநாள் கூட்டம் புதுடெல்லி, பிரகதி மைதான அரங்கில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எனினும், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில், 2047க்கான தொலைநோக்கு திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, புகார்களை குறைப்பதற்கான வாய்ப்புகள், பெண் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என நிதி ஆயோக் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.