சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் எஸ்வி சேகர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர். ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போதும் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் எஸ்வி சேகர். ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது அரசியலில் தீவிரமாக உள்ள எஸ்வி சேகர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். எஸ்வி சேகருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர்.
இதையடுத்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் தலைக்காட்டாமல் இருந்து வந்தார் எஸ்வி சேகர். எஸ்வி சேகர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சையில்தான் முடியும். இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் எஸ்வி சேகர்.
வெளிநாட்டில் இருந்து பேசும் ராமலட்சுமி என்பவர் தனக்கு தொடர்ந்து போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துவருவதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார் எஸ்வி சேகர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன் கர்நாடக தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியததால் தான் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எஸ்வி சேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
எஸ்வி சேகரின் அவரது புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள பட்டினம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எஸ்வி சேகர் போலீஸில் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்வி சேகர் புகார் அளித்ததை அறிந்த நெட்டிசன்கள் ஆடு படத்தை டிவிட்டரில் பகிர்ந்ததுதான் காரணமாக இருக்குமோ என கேட்டு வருகின்றனர்.
எஸ்வி சேகருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. எஸ்வி சேகர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார். அடிக்கடி ஆடு படங்களை பதிவிட்டு அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.