ஸ்டான்லி உட்பட 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; தலைவர்கள் ஆவேசம்!

சிசிடிவி, மருத்துவர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவு ஆகியவை இல்லாததால் சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இது அரசுக்கும், மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கும் பேரிடியை கொடுத்துள்ளது.

உடனே சரி செய்துகொள்ளவேண்டிய சாதாரண குறைகளை சுட்டிக்காட்டி கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறுவதென்பது ஏற்க முடியாதது என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ‘ தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்காகத்தான். இது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக் கொள்வது நல்லது’ என்று ஆவேசமானார்.

இந்த நிலையில், அமமுக டிடிவி தினகரன் இதுகுறித்து பதிவிட்டிருப்பது; மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவு கல்லூரியான சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால், சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளது.

பயோ மெட்ரிக் மாணவர் வருகைப்பதிவேடு, சிசிடிவி கேமரா ஆகியவற்றில் உள்ள விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியதோடு, அதற்கு தமிழ்நாடு மருத்துவ இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லாததால் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் இக்கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில நாட்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அலட்சியமாக செயல்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இச்சூழலில், மாணவர்களின் நலன் கருதி முதல்வர் நேரடியாகத் தலையிட்டு குறைகளை உடனடியாக சரிசெய்வதுடன் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.