சென்னை ஆட்டதாங்கல் பெருமாள் பாதம், பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சிவா. இவர், சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். என்னுடைய அப்பா, நான் சிறுவயதாக இருக்கும் போதே எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதனால் நான், அம்மா கஜலட்சுமி, அண்ணன் வெங்டேசன் ஆகியோர் மட்டும் வசித்து வந்தேன். என் அண்ணன் வெங்கடேசன் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் பதிவான குற்ற வழக்கில் கைதான வெங்கடேசன், ஜனவரி மாதம் சிறைக்கு சென்றார். பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் ஜாமீனில் வெளியில் வந்தார்.
வெங்கடேசனுக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த நரேஷ், சரண் என இரண்டு நண்பர்கள் உள்ளனர். அதனால் அவர்களுடன் சேர்ந்து வெங்கடேசன் மது அருந்துவார். நரேசின் வீட்டுக்கு வெங்கடேசன் அடிக்கடி சென்றுவந்ததால் நரேஷின் மனைவி ஐஸ்வர்யாவிடம் பேசி பழகி வந்தார். அதை தெரிந்து கொண்ட நரேஷ், வெங்கடேசன் மீது சந்தேகமடைந்தார். இந்தச் சமயத்தில் நரேஷின் வீட்டின் அருகில் உள்ள டீ கடைக்கு வெங்கடேசன் செல்லும்போதெல்லாம், `இங்கு என்னடா செய்கிறாய்?’ என்று நரேஷ், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபடுவார். அப்போது நரேஷ், `உன்னை ஒரு நாள் கொல்லாமல் விட மாட்டேன்’ என்று மிரட்டிவந்தார். இந்த விவகாரத்தில் நரேஷ், வெங்கடேசன் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
எனது அண்ணன் வெங்கடேசன், ஜெயிலில் இருந்து வெளியில் வந்தபிறகும் நரேஷ், தொடர்ந்து பிரச்னை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 26.5.2023-ம் தேதி நள்ளிரவில் சரணுக்கு போன் செய்த வெங்கடேசன், சரக்கு இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான். அப்போது எதிர்முனையில் பேசிய நரேஷ், `நீ ஏன்டா என் வீட்டின் அருகிலேயே நிற்கிறாய், டீ கடைக்கு வா, நீயா நானா என்று பார்த்துவிடலாம்’ என்று கூறியிருக்கிறார். அதனால் கோபத்துடன் வெங்கடேசன், வெளியில் சென்றிருக்கிறான். அப்போது நானும் அம்மாவும் வெங்கடேசனை தடுத்தோம். ஆனால் அவன் கேட்காமல், வீட்டிலிருந்த கத்தியை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டு சென்றான். அதனால் நானும் அவன் பின்னால் சென்றேன். பின்னர் டீ கடைக்குச் சென்ற வெங்கடேசன், `நரேஷுக்கு போன் செய்து நான் இங்கே தான் இருக்கேன், நீ எங்கே இருக்க?’ என்று கேட்டான். உடனே நரேஷ், `நீ அங்கேயே இருடா நான் வருகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கு வந்தார்.
பின்னர் வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்ட நரேஷ், வீட்டுக்குச் சென்றார். அப்போது அவர் பின்னால் வெங்கடேசன் சென்றான். அங்கு நரேஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவின் தம்பிகள் தினேஷ், லோகேஷ் ஆகியோர் இருந்தனர். கையில் கத்தி வைத்திருந்த நரேஷ், வெங்கடேசனின் தலையில் வெட்டினார். அதனால் வெங்கடேசன், தன்னிடமிருந்த கத்தியை நரேஷ் மீது வீசினான். இதில் நரேஷுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தினேஷ், அந்தக் கத்தியை எடுத்து வெங்கடேசனை வெட்டினார். அதனால் நான் தடுத்தபோது எனக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.
பின்னர் நரேஷ், தினேஷ் உள்ளிட்டோர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டியதில் அவன் கீழே விழுந்தான். அங்கு வந்த என் அம்மா மற்றும் அக்கம் பக்கத்தினரால், அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டனர். எனவே வெங்கடேசனை கொலை செய்த நரேஷ், தினேஷ், லோகேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சோழவரம் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட வெங்கடேசன், மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்தார். ஆரம்பத்தில் வெங்கடேசன், நரேஷ், சரண் ஆகியோர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். நரேஷின் மனைவியுடன் வெங்கடேசன் பழகியது நண்பர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் கொலையில் முடிவடைந்திருக்கிறது. இந்த வழக்கில் தினேஷ், நரேஷ் ஆகியோரை கைது செய்திருக்கிறோம். மீதமுள்ளவர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.