கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்க எண்களை அறிவித்த சென்னை காவல் துறை

சென்னை: சென்னையில் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs – DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP), கள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் (Whats app) மூலமாகவும் மற்றும் குறுஞ்செய்தி (SMS) வயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகரில் ஆங்காங்கே போலீசார் சார்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம் (PEW North) (பூக்கடை, வண்ணாரப் பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்-80728 64204.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மேற்கு மண்டலம் (PEW West) (அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்- 90423-80581.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தெற்கு மண்டலம் (PEW South) (அடையார், புனித தோமையர் மலை தி.நகர் காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண் – 90424-75097.

• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கிழக்கு மண்டலம் (PEW East) (திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மைலாப்பூர் காவல் மாவட்டங்கள்) செல்பேசி எண்-63823-18480.

சென்னை பெருநகர காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து, கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.