2018-ல், தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகங்களின் அட்டைப் படங்களை வண்ண மையமாக வடிவமைத்துப் பிரபலமானவர் கதிர் ஆறுமுகம். பிரபலமான பல தமிழ் நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் லேஅவுட் கலைஞராகப் பணிபுரிந்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகங்களுக்கும் வடிவமைத்துள்ளார். இதைத் தாண்டி பல தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்து அதற்கென தனி ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார்.
அதன் பிறகு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட ’கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ புத்தகத்தையும் கதிர்தான் வடிவமைத்தார். புத்தகத்தோடு சேர்ந்து கதிரின் வடிவமைப்பும் மக்களை ஈர்த்தது. சென்னையில் குக்கூ இமேஜஸ் என்ற டிசைனிங் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.
இப்போது கீழடி அருங்காட்சியகத்தில் `மதுரையும் கீழடியும்’, `வேளாண்மையும் நீர் மேலாண்மையும்’, `கலம் செய்கோ’, `ஆடையும் அணிகலன்களும்’, `கடல் வழி வணிகம்’, `வாழ்வியல்’ என்று தலைப்புகளில், ஆறு தனித்தனி கட்டடங்களில், மொத்தம் 18 ஆயிரம் தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொல்பொருள்களின் படங்களையும் விவரங்களையும், சுவர் பலகைகளில் வடிவமைக்கும் மொத்த பொறுப்பும் கதிர் ஆறுமுகத்துக்கும் அவர் குழுவினருக்கும் கொடுக்கப்பட்டது.
தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கதிர் ஆறுமுகம், ”உதயச்சந்திரன் ஐ.ஏ.ஸ் அவர்கள்தான் என்னை நம்பி, கீழடியில் ஒரு அங்கமாக இருந்து பணிபுரியும் வாய்ப்பை என் குக்கூ இமேஜஸ் நிறுவனத்திற்கு வழங்கினார். நானும் என் குழுவினரும் அறுபது நாள்கள் கீழடியிலேயே தங்கி இந்த வேலையைச் செய்து முடித்தோம். கீழடி அருங்காட்சியகம் தமிழர்கள் எல்லோருக்குமே பெருமை சேர்க்கக் கூடியது. அப்படிப்பட்ட பிரமாண்டமான கீழடி அருங்காட்சியகத்தில் உலகெங்கிலும் இருந்து வரும் மக்கள், என் நிறுவனம் சார்பில் வடிவமைத்த தொல்பொருள் காட்சிப் பலகைகளைப் பார்த்து தமிழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ளப் போகிறார்கள் என்பது எனக்குக் கூடுதல் பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
அடுத்ததாக கீழடி இணையதளம் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, நம் தமிழர் பெருமைகளையும் நாகரிகத்தையும் உலக மக்களுக்குச் சுலபமாகக் கொண்டு செல்ல முடியும்” என்கிறார்.
இதைத் தாண்டி, தமிழ் எழுத்துருக்கள், தமிழில் சின்னங்கள், புத்தக வடிவமைப்புகள் மற்றும் கிராஃபிக் டிசைனிங் சம்பந்தமான எல்லா வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.