ஹிஜாபை கழட்டச் சொல்வதா? – சீமான் கடும் கண்டனம்!!

நாகையில் அரசு மருத்துவரின் ஹிஜாபை பாஜக பிரமுகர் கழட்டச் சொன்ன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச் சகோதரி ஜன்னத்தை கடந்த 24 ஆம் நாள் இரவு நேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனித வெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது.

உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.