இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானின், 75 ஆண்டு கால வரலாற்றில், அந்நாடு நான்கு சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி, 32 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நான்கு முறை ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது; மூன்று முறை அரசியலமைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன; மூன்று முறை இந்தியாவுடன் போர் புரிந்து தோல்வி அடைந்துள்ளது. தற்போது அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடியால், அந்நாடு மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இங்கு, முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஆளும் அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் பலவந்தமாக கைது செய்யப்பட்டார். அவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
வரலாறு
இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
ராணுவ அதிகாரி ஒருவரது வீட்டில் தீ வைக்கப்பட்டது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், தற்போது அரசி யல் நெருக்கடி நிலையும் ஏற்பட்டு நாடு சீரழிந்து வருகிறது.
இதனால், அங்கு ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் ராணுவ ஆட்சி அமலுக்கு வர வாய்ப்பில்லை என, அந்நாட்டு ராணுவம் கூறியுள்ள போதும், தற்போதுள்ள ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்புணர்வு மேலோங்கி வருவதால், நிலைமையை சமாளிக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
காரணம், பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு அப்படி உள்ளது.
கடந்த 1947ல், இந்தியாவில் இருந்து தனி நாடாக பாக்., பிரிந்து சென்று, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகே, அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.
கடந்த 1956, மார்ச் 23ல் தான் பாக்., அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அதிபர் ஆட்சி அமலுக்கு வந்த 29 மாதங்களிலேயே அந்நாட்டில் முதல் அரசியல் குழப்பம் அரங்கேறியது.
பாக்., அதிபராக இருந்த இஸ்கந்தர் மிர்ஸா, ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து, 1958, அக்., 7ல் நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
அதிகாரத்தை கையில் எடுத்த அப்போதைய ராணுவ தளபதி முகமது அயூப் கான், அதிபர் இஸ்கந்தர் மிர்ஸாவை நீக்கிவிட்டு 1958, அக்., 27ல் பாக்., அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டார்.
பாக்.,கின் முதல் ராணுவ ஆட்சி 44 மாதங்கள் நீடித்தது. அதன் பின், தனியாக அரசியல் கட்சி துவங்கிய ராணுவ தளபதி அயூப் கான், அந்நாட்டு அதிபரானார்.
அவரது ஆட்சி காலத்தில் தான், 1965ல் இந்தியா மீது பாக்., போர் தொடுத்து படுதோல்வி அடைந்தது. 1969 மார்ச் வரையில், 10 ஆண்டுகள் நான்கு மாதங்கள் அயூப் கான் ஆட்சியில் இருந்தார்.
தனிநாடு
இவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ததும், அப்போது ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் யாஹ்யா கான் 1969, மார்ச் 25ல் ஆட்சியை பிடித்தார். இவர், 1971, டிச., வரை ஆட்சியில் இருந்தார்.
அயூப் கான் ஆட்சியில் மாற்றி எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை யாஹ்யா கான் மீண்டும் மாற்றினார். இவரது ஆட்சியிலும், இந்தியா மீது பாக்., 1971ல் போர் தொடுத்து மிக கேவலமாக தோற்றது. அப்போது தான், கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனி நாடாக பிரிந்தது.
ராணுவ தளபதிகள் ஆட்சி புரிந்த காலத்தில் ஆறு ஆண்டுகளுக்குள் இருமுறை இந்தியாவுடன் தோற்றதால், ராணுவம் வாலை சுருட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, ஆட்சி அதிகாரத்தை பாக்., மக்கள் கட்சி தலைவர் சுல்பிகர் அலி புட்டோ வசம் யாஹ்யா கான் ஒப்படைத்தார். இவர் தன் பங்குக்கு பாக்., அரசியலமைப்பு சட்டத்தை 1973ல் மாற்றினார். அதிபர் ஆட்சி முறையில் இருந்து பிரதமர் ஆட்சி முறைக்கு பாக்., அப்போது தான் மாறியது.
எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் சுல்பிக்கர் அலி புட்டோவை, பாக்., ராணுவ தளபதி ஜியா உல் ஹக் கைது செய்தார். அவரிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை 1977, ஜூலை 5ல் கைப்பற்றினார். பாக்., மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கியது.
தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பிரதமர் சுல்பிக்கர் அலி புட்டோ 1979, ஏப்., 4ல் துாக்கிலிடப்பட்டார்.
பின் பாகிஸ்தானை ஒன்பது ஆண்டுகள் 11 மாதங்கள் ஆண்ட ராணுவ தளபதி ஜியா உல் ஹக், 1988, ஆக., 17ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.
அதன் பின், பாக்.,கின் கடைசி ராணுவ புரட்சிக்கு காரணகர்த்தாவாக அமைந்தவர் பர்வேஸ் முஷாரப். கடந்த 1999ல் பாக்., பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபை வெளியேற்றிவிட்டு, அவர் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார்.
இவரது ஆட்சியின் போது தான், பாக்., கார்கில் போரில் ஈடுபட்டு இந்தியாவிடம் மூன்றாவது முறையாக மூக்குடைபட்டது.
பின், ராணுவ ஆட்சியாளர் என்ற அந்தஸ்தில் இருந்து, அதிபராக உயர்த்திக் கொள்வதற்காக, முஷாரப் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னை அதிபராக, 2002ல் அறிவித்தார். அப்போதும் அவரே ராணுவ தளபதியாக தொடர்ந்தார்.
யதார்த்தம்
இவர் 2007ல் தேர்தலில் போட்டியிட முயன்றதை பாக்., உச்ச நீதிமன்றம் எதிர்த்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே பதவியை விட்டு நீக்கிய கேலிக் கூத்துக்கள் அந்நாட்டில் அரங்கேறின.
இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முஷாரப், 2008, ஆக., 18ல் நிர்பந்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். எட்டு ஆண்டுகள் 10 மாதங்கள் இவரது பிடியில் பாக்., சீரழிந்தது.
இந்தியாவில் இருந்து பாக்., பிரிந்து சென்ற பின், இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மாறியது. பொருளாதாரத்தில் வல்லரசாகவும் உருவெடுத்து வருகிறது.
ஆனால், பாக்., உள்நாட்டு குழப்பங்களில் சிக்கி, பயங்கரவாதிகளை வளர்த்து நம் மீது ஏவி மறைமுக போர் மற்றும் நேரடி போர்களை நடத்தி வருகிறது.
இன்றைக்கு, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் நெருக்கடியிலும் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதற்கு, அந்நாட்டு ராணுவமே முழுமுதற் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இந்நிலையில், அந்நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில், அது பெரும் சீரழிவில் சிக்கும் என்பது தான் யதார்த்தம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்