ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தான் தற்போது பேசு பொருளாக உள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை கூறிவந்தாலும், முதலவரின் இந்த சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (27.5.2023) ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்த கலாச்சார சந்திப்பு நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான 84 வயதான அகிமி சகுராய்க்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். பின்னர் இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘ஜப்பான் எனக்கு அந்நியமான நாடு இல்லை. இதற்கு முன்பு, மேயர்கள் மாநாட்டுக்கு 1997-ஆம் ஆண்டும், சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கான மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு 2008-ஆம் ஆண்டும், நான் ஜப்பானுக்கு வந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட ஜப்பான் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களிடம் தமிழ்நாட்டில் நிலவும் தொழில் தொடங்குவதற்கு ஏற்றச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நீங்கள் எல்லாம் எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் என்று அன்போடுக் கேட்டு விடைபெறுகிறேன்’’ என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.